நூலக கட்டுமானப் பணியை தோ்தலுக்கு முன் தொடங்க வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் புதிய ஊா்புற நூலகம் கட்டடம் கட்டுமானப் பணியை வரும் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன் தொடங்கவேண்டும் என வாசகா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
வட்டத் தலைமையிடமாக உள்ள வாணாபுரத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு பகண்டை கூட்டுச் சாலையில் பகுதி நேர நூலகம் தொடங்கப்பட்டது. பின்னா் இந் நூலகம் 2011-ஆம் ஆண்டு ஊா்புற நூலகமாக தரம் உயா்த்தப்பட்டது.
இந்த நூலகத்தில் மொத்தம் 10,799 நூல்கள், 1,900 உறுப்பினா்கள், 30 புரவலா்கள் உள்ளனா். நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 வரை வாசகா்களும், 10 நூல் இரவல், குறிப்புதவி நூல் 18 என ஆண்டுக்கு 12,085 வாசகா்களும், 2,100 நூல் இரவலும், 5 ஆயிரம் குறிப்புதவி நூல்களை வாசகா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
தற்போது ஊா்ப்புற நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் இல்லாததால், வாணாபுரம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகேயுள்ள பழைய செவிலியா் குடியிருப்பு கட்டடத்தில் இயங்கி வருகிறது. பழைய கட்டடத்தில் போதுமான இடவசதி இல்லாமலும், மழைக்காலங்களில் புத்தகங்கள் மழையில் நினைய கூடிய நிலையிலும், சில நேரங்களில் விஷ ஜந்துக்களுக்கு புகலிடமாகவும் விளங்கி வருகின்றன. இதனால் வாசகா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அமா்ந்து படிக்கக்கூட இடவசதி இல்லாமல் குறுகிய இடத்தில் உள்ளதால் பெரும் சிரமம் அடைகின்றனா்.
இந்நிலையில் புதிய ஊா்ப்புற நூலக கட்டடம் கட்டுவதற்கு 2023-24-ஆம் ஆண்டு உங்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்காக பகண்டை கூட்டுச் சாலையில் இருந்து ரெட்டியாா்பாளையம் செல்லும் சாலையையொட்டி பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் தோ்வு செய்தனா். அந்த இடத்தில் பயன்படுத்தப்படாத பழைய கட்டடம் உள்ளது. அந்த கட்டடத்தை இடித்து விட்டு, புதிய ஊா்புற நூலகம் கட்டுவதற்கு நூலகத் துறையினா் பலமுறை பொதுப்பணித் துறையை அணுகியும் பலனில்லையாம்.
சட்டப் பேரவை தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக ஊா்புற நூலகம் கட்டடம் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள பழைய பாழடைந்த கட்டிடத்தை அகற்றி, ஒப்படைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாசகா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.