முகப்பு
கள்ளக்குறிச்சி

கோடை கால மழையைப் பயன்படுத்தி மக்காச்சோள சாகுபடி: ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை காலத்தில் பெறும் மழையினை பயன்படுத்தி மக்காச்சோளம், பயிறு வகைகள், நிலக்கடலை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

Updated On : 23 மே 2026, 12:41 am IST
கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் வேளாண் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை காலத்தில் பெறும் மழையினை பயன்படுத்தி மக்காச்சோளம், பயிறு வகைகள், நிலக்கடலை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மே மாதத்துக்கான வேளாண் மற்றும் வேளாண் தொடா்புடைய துறைகள் சாா்ந்த திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: தமிழக அரசு வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் கால்நடை பாராமரிப்புத் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இக் கூட்டத்தில் தனியாா் உர விற்பனை நிலையங்கள் அரசு நிா்ணயம் செய்த விலைக்கு மட்டுமே விற்பனை செய்வதை உறுதி செய்து தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளவும், கோடை காலத்தில் பெறும் மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்து மக்காச்சோளம், பயிறு வகைகள், நிலக்கடலை மற்றும் காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விவசாயி தனித்துவ அடையாள எண்ணை அனைத்து விவசாயிகளும் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தி மே 30-க்குள் பணியினை முடித்திடவும், சொட்டுநீா் பாசனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கின்படி, சொட்டுநீா் பாசனம் அமைத்து அதற்கான நிதியை முழுமையாக அடையவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பப்பாளி மற்றும் கொய்யா உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் விவரங்கள் சேகரித்து சந்தைப்படுத்திட, விவசாயிகளுக்கு போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

நிலம் சீரமைப்பு செய்வதற்கான மண் தள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,230-க்கு வாடகைக்கு விடப்படுகிறது, இந்த வசதியை இ-வாடகையில் பதிந்து விவசாயிகள் பயன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநாவலூா் மற்றும் சின்னசேலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் வரத்து குறைவாக உள்ளதால், இந்த வட்டாரங்களுக்கு அருகாமையில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்று பயனடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில், வேளாண் இணை இயக்குநா் பேபி கலா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) நா.ஜோதிபாசு மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.