புதுச்சேரி, ஏப். 6: புதுச்சேரி அரசு 50 ஆயிரம் கொசு வலைகளை ஏழை எளிய குடும்பங்களுக்கு அளிக்க உள்ளது. இதனால் கொசுக் கடியில் இருந்து தப்பிக்கலாமே தவிர கொசுவால் பரவும் சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோயிலிருந்து தப்ப முடியாது.
சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும் ஈடிஸ் ஈஜிப்டை வகை கொசுக்கள் பகலில் குறிப்பாக விடியல் மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கடிக்கக்கூடியவை. இந்த நேரத்தில் யாரும் கொசு வலைக்குள் இருக்கப்போவதில்லை. அதனால் அரசு வழங்கும் கொசு வலைகள் இரவில் கொசுக் கடியில் இருந்து மட்டுமே தப்ப முடியும்.
இந்த கொசு வலைகள் 180 செ.மீ. நீளமும், 70 செ.மீ. அகலமும், 160 செ.மீ. உயரமும் கொண்டவை. இதை ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இக்கொசு வலைகள் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்டவை. இதில் அமரும் கொசுக்கள் இறக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளன. மழைக்காலத்தில்தான் கொசுத்தொல்லை அதிகம் இருக்கும். மழைக் காலம் தொடங்க இன்னும் 6 மாதங்கள்
ஆகலாம். 6 மாதங்களுக்கு கொசு வலைகள் அவ்வளவாக பயன்படப்போவதில்லை. அதற்குள் கொசுவலைகளில் உள்ள பூச்சிக்கொல்லியும் செயலிழந்துவிடும். பின்னர் அரசு வழங்கும் கொசு வலைகள் கொசுக் கடியில் இருந்து மட்டும் காக்குமே தவிர, நோயிலிருந்து காக்காது.
கொசுவுக்கு தெரியுமா மாநில எல்லை: அரசு கடந்த பிப்ரவரியில் 10-லிருந்து 16-ம் தேதி வரை தீவிர கொசு ஒழிப்பு வாரத்தை நடத்தியது. நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. அரசுத் துறை அலுவலர்கள் கூட்டம் கூட்டினர். உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறையின் உயரதிகாரிகள் கூடி விவாதித்தனர்.
கொசுக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியில் சுலபமாக பெயர்ந்து செல்லும் வாய்ப்பு இருப்பதால் ஒரு வாரத்திற்குள் புதுச்சேரியின் அனைத்துப் பகுதிகளிலும் கொசு ஒழிப்புப் பணிகள் துரிதமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்து பணிகளை ஆரம்பித்தனர்.
சுகாதாரத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு கொசு மருந்து அடிக்கும் பயிற்சியை அளித்து புதுச்சேரி முழுவதும் அடித்தனர். தமிழகப் பகுதியிலிருந்து புதுச்சேரிக்கு கொசுக்கள் வரும் என்பதை மறந்துவிட்டனர்.
அலுவலரின் யோசனை செயல்படுத்தப்படவில்லை: புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சியில், நகராட்சிக் கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மலேரியா மற்றும் பைலேரியா ஒழிப்பு திட்ட உதவி இயக்குநர் டாக்டர் நீலாமணி தனது யோசனைகளை தெரிவித்தார். நாட்டில் அதிகப்படியான கொசுக்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள மலத்தொட்டிகளில் இருந்துதான் உருவாகிறது. இதைத் தடுத்தாலே 60 சதவீத கொசுக்களை ஒழித்துவிடலாம். அதற்கு ம வடிவ பைப்புகளை பயன்படுத்த வேண்டும். இதன் வழியாக மலத்தொட்டியிலுள்ள கழிவுநீர் வெளியேரும்போது பைப்புகளில் நீர் முழுமையாக தேங்கும். இதனால் கொசுக்கள் தொட்டியின் உள்ளே செல்லவும், இனப்பெருக்கம் செய்யவும் வாய்ப்பில்லாமல் போகும். இதன் 1-ன் விலை ரூ.150. இதை பல ஆயிரங்கள் அளவில் செய்ய ஆர்டர் கொடுத்தால் இதன் விலை ரூ.30 தான் ஆகும். கழிவுநீர் தொட்டிகளில் உள்ள காற்று போக்கிகளில் வீட்டில் பயனற்று கிடக்கும் துணிகளைக் கூட கட்டி கொசுக்கள் உள்ளே நுழையாமல் தடுக்கலாம் என்றார்.
மேலும் மோசமான கழிவறை தொட்டிகள் அரசு அலுவலகங்களிலும், அரசு குடியிருப்புகளிலும் தான் அதிகமாக உள்ளது. இதைத் அரசு தடுக்க முயல வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு யாரும் செயல்படுத்தியதாக தெரியவில்லை.
கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள மலத்தொட்டிகளில் உள்ள வெளிப்போக்கு குழாய்களில் கட்ட நைலான் வலை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் சட்டப்பேரவையில் ஏப்ரல் 6-ல் அறிவித்துள்ளார். நீர் வெளியேறும் குழாய்களை வழங்க நடவடிக்கை எடுக்காமல், வெளிப்போக்கு குழாய்களில் கட்ட நைலான் வலை வழங்க உள்ளனர்.
ஹோட்டல்கள் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு: கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடிக்கப்படுகிறது. இந்த வகை ஒரு முறை மட்டுமே செயல்படுத்த வேண்டும். மீண்டும் இம்முறையைக் கையாண்டால், கொசுக்கள் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். பின்னர் எத்தனை முறை புகை மருந்து அடித்தாலும் கொசுக்கள் ஒழியாது.
ஒரு ஊர் அதிகமாக கொசுவால் பரவும் நோயால் பாதிக்கப்படும்போது புகை மருந்து அடிப்பதை பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் பல ஹோட்டல்கள் புகை மருந்தும், கருவியும் வாங்கி வைத்துக்கொண்டு, அடிக்கடி புகை மருந்தை அடித்துக்கொள்கின்றனர். இதற்கான விழிப்புணர்வை ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்.கொசுவை ஒழிப்பதற்கான இத்தனை விஷயங்களை அரசு செயல்படுத்தாமல், குடும்பத்துக்கு ஒருவர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் கொசு வலைகளை இலவசமாக வழங்க இருக்கிறது. அரசுக்கு கொசுவிலிருந்து மக்களைக் காப்பதும், கொசுவை ஒழிப்பதும் நோக்கமல்ல. இலவசங்களை அளித்து அவர்களின் ஓட்டுக்களை வாங்குவது மட்டுமே நோக்கமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.