உச்ச நீதிமன்ற நகல் எரிப்புப் போராட்டம்: 48 பேர் கைது
உச்ச நீதிமன்ற நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 48 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
உச்ச நீதிமன்ற நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 48 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தலித் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து, பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டது.
அதன்படி, புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகே அந்தக் கழகத்தின் தலைவர் வீரமோகன் தலைமையில், கழக நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடினர். அப்போது, அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர், தீர்ப்பின் நகலை எரிக்க முயன்றனர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுக்க முயன்றனர். அப்போது, காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் இளங்கோ, மாநிலச் செயலர் சுரேஷ், பொருளாளர் பெருமாள், இளைஞரணித் தலைவர் சிவமுருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு ஐயப்பன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அழகிரி, திராவிடர் கழகச் செயலர் அறிவழகன், லோக் ஜனசக்தி நிர்வாகி புரட்சிவேந்தன், அம்பேத்கர் தொண்டர் படை நிர்வாகி பாவாடைராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.