கல்லூரிகளை பசுமை வளாகங்களாக மாற்ற வேண்டும்: கிரண் பேடி
கல்லூரிகளை பசுமை வளாகங்களாக மாற்ற கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தினார்.
கல்லூரிகளை பசுமை வளாகங்களாக மாற்ற கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தினார்.
புதுவை ஆளுநர் கிரண் பேடி வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை அவர், தனது 151-ஆவது கள ஆய்வுப் பணியை புதுச்சேரி லாசுப்பேட்டை தாகூர் கலைக் கல்லூரியில் மேற்கொண்டார்.
இதனை முன்னிட்டு, தாகூர் கலைக் கல்லூரிக்கு புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன், காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, இதயா கல்லூரி உள்ளிட்ட 8 கல்லூரிகளின் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை தாகூர் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
அங்கு வந்த ஆளுநர் கிரண் பேடி முதலில் தாகூர் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி சுற்றுச் சுவர்களில் பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து வைத்திருப்பதைப் பார்வையிட்டு, அவற்றை வரைந்த மாணவர்களை அழைத்துப் பாராட்டினார்.
தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மூலிகை, காய்கறி, பழத்தோட்டத்துக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது, அங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் என்னென்ன என்று அவர் கேட்டறிந்தார்.
அப்போது, காலியாக உள்ள இடங்களிலும் மரக்கன்றுகளை நடும் படி ஆலோசனை வழங்கினார்.
பின்னர், கல்லூரி முதல்வரின் அறைக்குச் சென்று விவேகானந்தர் படத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர், மரத்தடியில் கல்லூரி மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது:
கல்லூரி வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். தற்போது நாம் யாரோ நட்டு வளர்த்துவிட்ட மரத்தின் நிழலில் அமர்ந்துள்ளோம். அதன் பிராண வாயுவை சுவாசிக்கின்றோம். அதுபோல, நாமும் நிழல், பழம் வேண்டும் என எதிர்பார்க்காமல் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். இனி, ஒவ்வொரு பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களின் போதும் ஒரு மரக்கன்று நட வேண்டும் என உறுதியேற்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் ஒரு அங்குல இடத்தையும் விட்டுவைக்காமல் மரம், காய்கறிச் செடிகளை நட்டு வளர்க்க வேண்டும். காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்ற வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பசுமையாக மாற்றும் திட்டத்தை கொள்கை முடிவாக எடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
நிகழ்வில் உயர்கல்வித் துறை இயக்குநர் யாசிம் நாராயண ரெட்டி, கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ், கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.