காங்கிரஸ் சார்பில் இன்று உண்ணாவிரதம்
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஏப்.9) உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஏப்.9) உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 4 ஆண்டுகளாக தவறான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து, அனைத்து தரப்பு மக்களையும் அல்லல்பட வைத்த மத்திய பாஜக அரசால் நாடு முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தலித் வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மெத்தனம், எதிரிகள் மீதி பழி போடுவது என பாஜக அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது.
எனவே, மதச் சார்பின்மை, தேச ஒற்றுமை, சகோதரத்துவம் உள்ளிட்ட நற்பண்புகளைக் காக்க, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொள்ளுமாறு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டார். அதன்படி, திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.