பழைமையான ஆயி குளத்தை சீரமைக்க ஆளுநர் உத்தரவு
புதுச்சேரியில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆயி குளத்தை சீரமைக்க துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆயி குளத்தை சீரமைக்க துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
புதுவை ஆளுநர் கிரண் பேடி தனது 156-ஆவது கள ஆய்வாக புதுச்சேரி அருகே முத்திரையர்பாளையத்தில் உள்ள ஆயி குளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் சென்றார்.
குளத்தை சுற்றிப்பார்த்த அவர், குளத்தை உடனடியாக தூர்வார உத்தரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார். பின்னர், தனது கட்செவி அஞ்சல் மூலம் அவர் வெளியிட்ட செய்தி:
ஆயி குளம் 500 ஆண்டுகள் பழைமையானது. தேவதாசி ஆயி என்பவரால் இக்குளம் தோண்டப்பட்டது. இங்கு நீர்வளம் அதிகம் இருப்பதாக பிரெஞ்சு அரசு கண்டு, நீரை உறிஞ்சி புதுச்சேரி நகரத்துக்கு வழங்குவதற்காக சிறிய அளவிலான நீர்த்தேக்கத்தை கட்டியது.
ஆளுநர் மாளிகை உள்ளிட்ட புதுச்சேரி நகரின் மையப் பகுதிக்கு தேவையான குடிநீரை வழங்கி வருகிறது. இங்கு 12 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தினமும் 20 எம்.எல்.டி. நீர் எடுக்கப்படுகிறது.
கடந்த 11 வாரங்களுக்கு முன்பு குளத்தின் தூய்மைப் பணிக்கு இளம் தன்னார்வலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இன்றைய கள ஆய்வு இக்குளம் சீரமைப்பதற்கு அவசர தேவை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. பொதுப்பணித் துறை, சுற்றுச்சூழல் துறை, அறிவியல் தொழில்நுட்பத் துறை, நிலத்தடி நீர் ஆணையம், வேளாண் துறை, தொண்டு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து குளத்தை சீரமைக்க வேண்டும். ஒரு மது தொழிற்சாலை, ஒரு கழிவுநீர் வாய்க்கால் மற்றும் ஒரு தொழிற்பேட்டையால் இக்குளம் சூழப்பட்டுள்ளது. எனவே, இந்த குளத்தை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மே
1-ஆம் தேதி கூட்டாகவும், இணைந்தும் குளத்தை பாதுகாக்க மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மைப் பணியை மேற்கொள்ளவும், இதன் மூலம் மழை நீரை சேமிக்கச் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் ஆய்வின்போது பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் கனியப்பன், உதவிப் பொறியாளர் வாசு, உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி விபின் மற்றும் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் உடனிருந்தனர்.