மருத்துவர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு
புதுச்சேரியில் மருத்துவர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் மருத்துவர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பொன்நகர் 4-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரஜினி பிரகாஷ். காலாப்பட்டு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.
வீட்டில் பாதுகாப்புக்காக அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்திவைத்துள்ளார். கேமராவை யார் தொட்டாலும் உடனே தனது செல்லிடப்பேசிக்கு எச்சரிக்கை தகவல் வரும் வகையில் அதனை அமைத்துள்ளார்.
இந்த நிலையில், ரஜினி பிரகாஷ் வீட்டை பூட்டிவிட்டு தனது பெற்றோருடன் காரைக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை காலை சென்றார்.
சனிக்கிழமை இரவு ரஜினி பிரகாஷின் கேமராவை யாரோ தொட்டுள்ளதாக அவரது செல்லிடப்பேசிக்கு எச்சரிக்கை தகவல் வந்தது. இதனால் திடுக்கிட்ட அவர், லாஸ்பேட்டையில் உள்ள தனது நண்பர் அன்பு என்பவரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தனது வீட்டுக்குச் சென்று பார்க்கக் கூறியுள்ளார்.
அதன் பேரில் அன்பு ஞாயிற்றுக்கிழமை காலை ரஜினி பிரகாஷின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததும், வீட்டினுள் பீரோ திறக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்ததும் தெரிய வந்தது. இது குறித்து அவர் உடனே ரஜினி பிரகாஷுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, ரஜினிபிரகாஷ் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம், வெள்ளிப் பொருள்கள் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ரஜினி பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரபுத்திரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது முகமூடி, கையுறை என உடல் முழுவதும் மூடியபடி வந்த
2 மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது பதிவாகி இருந்தது. பிறகு அந்த நபர்கள் கேமராவை மேல் பக்கமாக திருப்பி வைத்துவிட்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதே நபர்கள் அருகே விஜய் என்பவர் குடியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு நகை, பணம் எதுவும் இல்லாததால் வெளியேறி உள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.