முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ரோந்துக் காவலர்களுக்கு சைக்கிள்

புதுச்சேரியில் ரோந்துக் காவலர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் வே.நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

புதுச்சேரியில் ரோந்துக் காவலர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் வே.நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.
புதுச்சேரி காவல் துறையில்  சட்டம்-ஒழுங்கு,  குற்றம்,  போக்குவரத்து,  ரோந்துக் காவல்,  சுற்றுலா பாதுகாப்பு என தனித் தனிப் பிரிவுகள் இயங்கி வருகின்றன. 
 கடந்த டிசம்பர் மாதம் வரை ரோந்துக் காவல் பிரிவில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர்.  இந்த நிலையில்,  காவல் நிலையங்களில் ஆய்வு செய்த ஆளுநர் கிரண் பேடி,  பெண்களும் ரோந்துக் காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து மறுநாளே பெண் காவலர்களுக்கான ரோந்துப் பிரிவும் தொடங்கப்பட்டது.  
இந்நிலையில், ரோந்துக் காவலர்களுக்கான சைக்கிள் வழங்கும் திட்டம் புதுச்சேரி கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு டிஜிபி சுனில்குமார் கெளதம் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்று ரோந்துக் காவலர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடக்கிவைத்தார். 
சைக்கிள் ஓட்டிய முதல்வர் 
பின்னர், ரோந்துக் காவலரின் சைக்கிளை வாங்கிய முதல்வர் சிறிது தொலைவு அதை ஓட்டிச் சென்றார்.  அவருடன் டிஜிபி சுனில்குமார் கெளதம் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் சைக்கிள் ஓட்டிச் சென்றனர்.
நிகழ்ச்சியில் டிஐஜிகள் ராஜீவ் ரஞ்சன்,  சந்திரன்,  முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா,   கண்காணிப்பாளர்கள் வெங்கடசாமி,  அப்துல்ரஹீம்,   ரட்சனா  சிங்,  ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
ரோந்துக் காவலர்களுக்கு முதல் கட்டமாக 150 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 

முழு கட்டுரையைப் படிக்க →