புதுச்சேரி

அதிகாரிகளை மிரட்டிய விவகாரம்: புதுவை ஆளுநர் மீதுஅதிமுக எம்எல்ஏ உரிமை மீறல் புகார்

DIN

ரெளடிகளுடன் சென்று அதிகாரிகளை மிரட்டியதாக, தன் மீது விசாரணைக்கு உத்தரவிட்ட புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மீது புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கத்திடம் அதிமுக எம்.எல்.ஏ. ஆ.பாஸ்கர் சனிக்கிழமை உரிமை மீறல் புகார் அளித்தார்.
மனு விவரம்: கடந்த 10-ஆம் தேதி இரவு 11.13 மணியளவில் 98100 00811 என்ற செல்லிடப்பேசி எண்ணில் இயங்கும் கட்செவி அஞ்சல் மூலம் (வாட்ஸ்-அப்) ஒரு குறுஞ்செய்தி வெளியானது. அந்த எண் துணை நிலை ஆளுநருக்குரியதாகத் தெரிகிறது. அந்தக் குறுஞ்செய்தியில், முதலியார்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாகிய நான் (பாஸ்கர்) கடந்த 10-ஆம் தேதி காலை 10 மணி அளவில் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் பி.எம்.டபிள்யூ., காரை கொண்டுவந்து உயர் தொழில்நுட்ப பதிவெண் பலகையை பொருத்தச் சென்றதாகவும், அதற்கு துறை அதிகாரிகள், கார் கண்ணாடியில் கருப்பு சுருள் ஒட்டியிருந்ததால் பலகையை பொருத்தமறுத்ததாகவும், அதனால், 10 ரெளடிகளுடன் சென்று அதிகாரிகளை நான் மிரட்டி பதிவெண் பலகையை பொருத்திச் சென்றதாகவும், இதுதொடர்பாக ஆளுநர் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்ததாகவும் அந்தக் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், நான் கடந்த 10- ஆம் தேதி புதிய பி.எம்.டபிள்யூ, கார் வாங்கவும் இல்லை, அன்றைய தினம் போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லவும் இல்லை. மேலும், அதுபோல எந்தவிதமான நிகழ்வுகளும் அன்றைய தினம் அங்கு நடைபெறவுமில்லை. மாறாக, எனக்கு பொதுமக்களிடம் உள்ள செல்வாக்கை குறைத்து, எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், நடக்காத ஒரு நிகழ்வை நடந்ததாகச் சித்திரித்து வேண்டுமென்றே ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அந்தப் பொய்த்தகவல் வெளியிடப்பட்டது. இதனால், நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். எனவே, இதனை நான் உரிமை மீறல் புகாராக தங்களுக்குத் தெரிவிக்கிறேன். இந்த தவறை யார் செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த மனுவில் பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். அப்போது எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், பின்னர் கூறியதாவது: எம்.எல்.ஏ. பாஸ்கர் உரிமை மீறல் புகாரைக் கொடுத்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் 3 நாள்களுக்குள் விளக்கமளிக்க கேட்கப்படும். அந்த விளக்கம் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT