புதுச்சேரி

அரசுப் பேருந்தில் ஆய்வுக்குச் சென்ற புதுவை ஆளுநர்

DIN

புதுவையில், பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளுடன் சனிக்கிழமை அரசுப் பேருந்தில் பயணம் செய்தார்.
புதுவை ஆளுநர் கிரண் பேடி வார இறுதி நாள்களில் ஆய்வுக்குச் சென்று வருகிறார். தனது 133-ஆவது வாராந்திர ஆய்வு பயணமாக புதுவை ஆளுநர் மாளிகையில் இருந்து அரசுப் பேருந்தில் ஏறி கனகன் ஏரிக்குச் சென்றார்.
ஏற்கெனவே இரு முறை கனகன் ஏரிக்குச் சென்ற ஆளுநர் கிரண் பேடி, இதை விரைவில் சுற்றுலாத் தலமாக மாற்றி படகு சவாரிக்கு தயார்படுத்த உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சனிக்கிழமை சென்ற அவர், கனகன் ஏரியில் ஆகாயத் தாமரையை அகற்றும் பணி, ஏரிக்கரை பகுதியை சமன்படுத்தும் பணி, மருத்துவக் கழிவுநீர் கலப்பு தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டார்.
மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்தப் பணியை பிப்.5-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அன்றைய தினம் அரசு விழா நடத்த வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், எதிர்கட்சித் தலைவருமான என்.ரங்கசாமியை அழைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அங்கு கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்த ஏரி புனரமைப்பு குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆளுநரும் பங்கேற்று அவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது ஏரியில் பழுதடைந்த மதகு குறித்து ஆளுநரிடம் மாணவர்கள் தெரிவித்தனர். மதகை உடனடியாக சரிசெய்யும்படி அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தழுதாழி கிராமத்தில் சிருஷ்டி அறக்கட்டளை மூலம் நடைபெற்று வரும் கிராம வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்து மீண்டும் அரசுப் பேருந்தில் ஏறி ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர்துறை ஆணையர் வள்ளுவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ருத்ர கெளட் மற்றும் ஆளுநர் மாளிகை
அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT