புதுச்சேரி

இன்று காணும் பொங்கல்: புதுச்சேரி கடலில் குளிக்கத் தடை

தினமணி

காணும் பொங்கலையொட்டி புதுச்சேரி கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலின் 3-ஆம் நாள் காணும் பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் தங்களது குழந்தைகள், உறவினர்களுடன் பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வது வழக்கம். புதுச்சேரியில் உள்ள முக்கியச் சுற்றுலா தலங்களான கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி, ஆரோவில் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும். இதனால் அன்றைய தினம் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு காணும் பொங்கல் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுவை காவல் துறைத் தலைவர் சுனில்குமார் கெüதம் உத்தரவுப்படி, சரக காவல் துணைத் தலைவர் (டிஐஜி) ராஜீவ் ரஞ்சன் மேற்பார்வையில், 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுகின்றனர்.
முக்கிய நாள்களில் புதுவையில் குவியும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள், இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழக்கும் அசம்பாவிதங்கள் தொடர்வதால் கடலில் இறங்கி குளிக்க தற்போது தடை விதிக்கப்பட் டுள்ளது. 
தடையை மீறி கடலில் இறங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர திரையரங்குகள், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களிலும் வழக்கத்தை விட கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
நகைப் பறிப்பு, வழிப் பறிச் சம்பவங்களை தடுக்க ஆங்காங்கே சாதாரண உடையில் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்துக் காவலர்கள் முக்கியச் சந்திப்புகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். கடற்கரைச் சாலையில் பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு வருவோர் தங்களது வாகனங்களை நிறுத்த பழைய துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
மேலும் செவ்வாய்க்கிழமை பார்கள், மதுக் கடைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்படும் என்பதால், அங்கும் காவலர்கள் ரோந்து செல்ல திட் டமிட்டுள்ளனர். 
நிகழாண்டு தாவரவியல் பூங்காவில் சிறுவர் ரயில் இயங்குவதால் குழந்தைகள் குதூகலமடைந்துள்ளனர். அங்கு அசம்பாவித சம்பவங்களை தடுக்க காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையைக் கொண்டாட புதுவைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் தங்கும் விடுதிகளிலும் அறைகள் நிரம்பி வழிகின்றன. 
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர்கள் குணசேகரன் (கிழக்கு), அப்துல் ரஹீம் (தெற்கு), ரட்சனா சிங் (வடக்கு), வீர.பாலகிருஷ்ணன் (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT