கேரளத்தைப் போல ரூ.4.5 லட்சம் வழங்கக் கோரிக்கை
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு கேரள மாநிலத்தைப் போல ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.4.5 லட்சம் வழங்க வேண்டும் என்று மாஹே எம்எல்ஏ ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு கேரள மாநிலத்தைப் போல ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.4.5 லட்சம் வழங்க வேண்டும் என்று மாஹே எம்எல்ஏ ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.
புதுவை சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சுயேச்சை எம்எல்ஏ ராமச்சந்திரன் பேசியதாவது:
மாஹேவில் அரசுத் துறையில் 50 சதவீத பணிகள் காலியாக உள்ளன. அமைச்சுப் பணியாளர்கள் பதவி உயர்வு இல்லாமல் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனர்.
பாப்ஸ்கோ, பாசிக் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஏற்கெனவே அரசு உறுதிஅளித்தபடி 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அமல்படுத்தவில்லை.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாஹேயில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டு 10 மாதங்களுக்கு பின்புதான் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதே திட்டத்தில் கேரளத்தில் மத்திய, மாநில அரசுகளின் மானியம் தலா ரூ.1.5 லட்சம், உள்ளாட்சி அமைப்புகளின் மானியம் ரூ.1.5 லட்சம் என மொத்தம் ரூ.4.5 லட்சம் வழங்கப்படுகிறது.
ஆனால், புதுவையில் மத்திய அரசின் மானியம் ரூ.1.5 லட்சம் உள்பட மொத்தமாக ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது என்றார் ராமச்சந்திரன்.