"புதுச்சேரியின் பெருமையை உலகுக்கு உணர்த்தியது அரிக்கன்மேடு'
புதுச்சேரியின் பெருமையை உலகுக்கு உணர்த்தியது அரிக்கன்மேடு என்று தாகூர் அரசுக் கல்லூரி முதல்வர் இளங்கோ தெரிவித்தார்.
புதுச்சேரியின் பெருமையை உலகுக்கு உணர்த்தியது அரிக்கன்மேடு என்று தாகூர் அரசுக் கல்லூரி முதல்வர் இளங்கோ தெரிவித்தார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில், புதுச்சேரி தொல்லியல் என்னும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) இளங்கோ தலைமை வகித்துப் பேசியதாவது:
புதுச்சேரி தொன்மையான நகரம். புதுச்சேரியின் பெருமையை உலகுக்கு உணர்த்தியது அரிக்கன்மேடு. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த துறைமுக பட்டினமாக விளங்கியுள்ளது. இதன் வழியாக ரோமானியர்களோடு தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இத்தகைய பெருமை மிகுந்த நகரமாக அரிக்கன்மேடு திகழ்ந்துள்ளது என்றார். கல்லூரி வரலாற்று துறைப் பேராசிரியர் ரவிச்சந்திரன் பேசுகையில், காவிரிப் பூம்பட்டினத்துக்கு இணையான துறைமுகமாக அரிக்கன்மேடு விளங்கியது. வெளிநாட்டுக் கப்பல்கள் இங்கு வந்து தங்கி தம் தேவைகளை நிறைவு செய்து கொண்டு செல்லும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் இருந்துள்ளன.
அரிக்கன்மேட்டில் நிகழ்த்திய அகழ்வாய்வில் பல தொல்பொருட் சின்னங்கள் கிடைத்துள்ளன. அதன் மூலம் புதுச்சேரி தொன்மை மிக்கது என நிரூபணமாகியுள்ளது என்றார். முன்னதாக, தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கண்ணன் வரவேற்றார். இணைப் பேராசிரியர் கருணாநிதி நோக்க உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.