சிவப்பு, மஞ்சள் நிற குடும்ப அட்டை விவகாரம்: அமைச்சர் கந்தசாமி புது உத்தரவு
சிவப்பு-மஞ்சள் நிற குடும்ப அட்டை விவகாரம் தொடர்பாக நியாய விலைக் கடைகளில் ஒட்டப்பட்ட பட்டியல் செல்லாது என்று சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி அறிவித்தார்.
சிவப்பு-மஞ்சள் நிற குடும்ப அட்டை விவகாரம் தொடர்பாக நியாய விலைக் கடைகளில் ஒட்டப்பட்ட பட்டியல் செல்லாது என்று சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி அறிவித்தார்.
புதுவையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாலும், அனைவருக்கும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மாற்றி அமைக்க ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தி வருவதாலும், குடிமைப்பொருள் வழங்கல் துறை இலவச அரிசி பெறுவதற்கு சில விதிமுறைகளை கொண்டு வந்தது.
அதாவது, சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களில் தகுதியில்லாதவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை நீக்கம் செய்தது. மேலும், மஞ்சள் அட்டைதாரர்களில் இலவச அரிசி பெறுவதற்கு வருமான உச்சவரம்பை ரூ.2 லட்சமாக நிர்ணயித்துள்ளது.
இதற்கு அ.தி.மு.க., என்.ஆர். காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, தனது தொகுதி அலுவலகத்தில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள், நியாய விலைக் கடை, அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோருடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அப்போது, சிவப்பு நிற குடும்ப அட்டைகள் மாற்றம் தொடர்பாக ஊழியர்கள், பொதுமக்கள் இடையே நிலவும் பிரச்சினைகள் குறித்து கேட்டதுடன், மஞ்சள், சிவப்பு நிற குடும்ப அட்டைகள் குறித்து ஒரு முழு ஆய்வு எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து துறை அதிகாரிகளிடம் விவாதித்தார்.
உணவு பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி ரூ.2 லட்சத்துக்கு குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த விஷயத்தை கையாள வேண்டும். இதுகுறித்து தீர்வு காணப்படும் வரை சிவப்பு அட்டைகளை மஞ்சள் அட்டையாக மாற்றம் செய்து ஒட்டப்பட்டவை செல்லாது, இது சம்பந்தமாக மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
கூட்டத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் யஷ்வந்தையா, குடிமைப்பொருள் வழங்கல் துறை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், பாண்லே மேலாண் இயக்குநர் சாரங்கபாணி, நியாய விலைக் கடை ஊழியர்கள் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் ஜோதிராஜ், காண்பெட் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மகளிர் மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குநர் அமுதா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.