முகப்பு
புதுச்சேரி

குபேர் அங்காடியில் மூடிக் கிடக்கும் எடை மேடை திறக்கப்படுமா?

புதுச்சேரி குபேர் அங்காடியில் மூடிக்கிடக்கும் எடை மேடையைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On : 21 மே, 2018 at 8:29 AM
பகிர்:

புதுச்சேரி குபேர் அங்காடியில் மூடிக்கிடக்கும் எடை மேடையைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரியில் பழைமை வாய்ந்த குபேர் அங்காடி உள்ளது. இங்கு காய்கறிகள், மளிகைப் பொருள்கள், மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களுக்கான அங்காடிகள் அமைந்துள்ளன.  இங்கு பொதுமக்கள்,  சிறு வியாபாரிகள் வந்து பொருள்களைக் கொள்முதல் செய்து செல்வர்.
இங்கு வாங்கப்படும் பொருள்களின் எடை சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளும் வகையில், புதுவை அரசின் சட்ட முறை எடையளவு ஆய்வியல் கட்டுப்பாட்டுத் துறை சார்பில், பொது தராசு மேடை இயங்கி வந்தது.
இந்த எடைமேடை பல ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கிறது. 
இதைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் பி.ரகுபதி, சட்ட முறை எடையளவு ஆய்வியல் கட்டுப்பாட்டுத் துறைக்கு கடந்த 23.9.2013 அன்று மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து, எடை மேடை 7.11.2013 முதல் செயல்படும் என பதில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால்,  இதுவரை எடை மேடை திறக்கப்படவில்லை. இந்த அலுவலகத்தின் பெயர் பலகையும் சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால், பொதுமக்களும்,  சிறு  வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே,  எடை மேடையை உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.