முகப்பு
புதுச்சேரி

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டுக்காக சட்டம் இயற்றக் கோரிக்கை

புதுவையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று  புதுவை மாநில மாணவர்கள் - பெற்றோர்கள்

Updated On : 21 மே, 2018 at 8:29 AM
பகிர்:

புதுவையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று  புதுவை மாநில மாணவர்கள் - பெற்றோர்கள் நலச் சங்கத் தலைவர் பாலா (எ) பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து புதுவை அரசின் தலைமைச் செயலர்,  சுகாதாரத் துறைச் செயலர் ஆகியோருக்கு அவர் சனிக்கிழமை அனுப்பிய மனுவின் விவரம்:
அரசியல் சட்டப்படி  அனைத்து  உதவி பெறும்  தனியார் கல்வி நிறுவனங்களிலும், சமூகப் பொருளாதார வகையில் பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கு இட ஒதுக்கீடு செய்யும் வகையில், மாநில அரசுகள் சட்டம் இயற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய சட்டம் தற்போது வரை புதுவை உருவாக்கப்படவில்லை. 
தற்போது, அமலில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி அரசு இட ஒதுக்கீடு இடங்களை உறுதி செய்யும் சட்டப் பிரிவு வேண்டுமா? வேண்டாமா?  என வாதங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் அந்தச் சட்டப் பிரிவு நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தனியார் கல்லூரி நிர்வாகங்கள் தங்களது கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மேற்படி சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி, நீதிமன்றத்தை அணுகி உள்ளன.
இதன் காரணமாக புதுவையைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி, உயர்கல்வி ஆகியவை கானல் நீராகும் அபாயம் உள்ளது.
மாநில அரசுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற அனுமதிக்கும் அரசியல் சாசன சட்டம் 15 (5) ஆம் பிரிவு செல்லுபடியாகும் என்றும், மாநில அரசுகள் சிறுபான்மையினர் நிறுவனங்கள் தவிர்த்து இதர தனியார் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
புதுவையில் சிறுபான்மையினர் நிறுவனங்கள் தவிர்த்து, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் சமூகப் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கு உடனடியாக இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தும் வகையிலான ஒரு சட்டத்தை உருவாக்குவது அவசியம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.