தொடர் மின் தடை குறித்து எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதைத் தடுப்பது தொடர்பாக அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.சிவா மின் துறை அதிகாரிகளுடன்
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதைத் தடுப்பது தொடர்பாக அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.சிவா மின் துறை அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
உருளையன்பேட்டை தொகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. இரா.சிவாவிடம் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையத்தில் உள்ள மின் துறைத் தலைமை அலுவலகத்தில் துறை அதிகாரிகளுடன் சிவா எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மின் பொறியாளர்கள் கோபாலகிருஷ்ணன், சீனுவாசன், ரமேஷ் மற்றும் மின் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, தொடர் மின் தடை பிரச்சைனயைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மின் தடைக்கான காரணம் குறித்தும் ஆராயப்பட்டது. மின் தடை பிரச்னையை நிரந்தரமாக போக்க புதிதாக 3 மின் வழித் தடங்கள் அமைக்கவும், உயர்மின் அழுத்த மின் மாற்றிகள் அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.