முகப்பு
புதுச்சேரி

300 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் சாய்ந்தது: போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரி அருகே 300 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் சாய்ந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:52 AM
பகிர்:

புதுச்சேரி அருகே 300 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் சாய்ந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
 புதுச்சேரி கடந்த 5 நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவும் மழை பெய்தது. இந்த நிலையில், புதுச்சேரி அருகே சேதாரப்பட்டு - கரசூர் சாலையில் இருந்த 300 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் ஞாயிற்றுக்கிழமை வேரோடு சாய்ந்தது. உயர் மின்னழுத்த கம்பிகள் மீது ஆலமரம் சாய்ந்ததில் 3 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், அருகே உள்ள மின்மாற்றிகள் வெடித்து சிதறின. அப்போது, அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
 ஆலமரம் சாய்ந்த பகுதி தொழிற்சாலைகளுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால், அந்தச் சாலை வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. மின் கம்பங்கள் சாய்ந்ததால், சேதாரப்பட்டு பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
 தகவலறிந்த சேதாரப்பட்டு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனங்களை வேறு வழிகளில் திருப்பிவிட்டனர். தீயணைப்பு வீரர்கள், மின் துறை அதிகாரிகள் வந்து வேரோடு சாய்ந்த ஆலமரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை போக்குவரத்து சீரானது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.