புதுச்சேரி

ரஃபேல் விமான பேர ஊழல் மோடி அரசை வீட்டுக்கு அனுப்பும்: புதுவை முதல்வர் நாராயணசாமி

DIN


ரஃபேல் போர் விமான ஊழல் மோடி அரசை வீட்டுக்கு அனுப்பும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார்.
மத்திய பாஜக அரசின் ரஃபேல் போர் விமான ஊழலை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம், பேரணியை நடத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
அதன்படி, புதுவை காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் பேரணி, ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பேரணி முடிவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: மத்திய பாஜக ஆட்சியில் ஊழலே நடக்கவில்லை என்று பலர் பேசி வந்தனர். ஆனால், நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் ரஃபேல் விமான ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் மோடி அரசை நிச்சயம் வீட்டுக்கு அனுப்பும்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஃபேல் போர் விமானங்களை வாங்க அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. விமானம் ஒன்றுக்கு ரூ. 526 கோடி வீதம் 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தமானது. ஆனால், அதன் பின்னர் வந்த பாஜக ஆட்சியில் ஒரு விமானத்தை ரூ. 1,670 கோடிக்கு வாங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம், ரூ. 41 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
அதுபோல, பெட்ரோல் விலையும் காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 60-ஆக இருந்தது. தற்போது ரூ. 85 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இதற்கெல்லாம் மத்திய அரசு காரணம் இல்லை என்று ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். ஜி.எஸ்.டி.யால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் மொத்தமாக முடங்கிவிட்டன என்றார் அவர்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது ஒரு விமானத்தின் விலை ரூ. 526 கோடி. ஒப்பந்தப்படி 26 விமானங்களை பிரான்ஸ் நிறுவனம் அளிக்கும். மீதமுள்ள விமானங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய தொழில்நுட்ப வசதிகளை அந்த நிறுவனம் செய்து தரும். இதன் மூலம் நமது இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கும்.
ஆனால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ஒப்பந்தத்தை போட்டு ரூ. 41 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தை இணைத்து ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், பாஜக அரசு ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனம் ஒப்பந்தம் போடுவதற்கு 8 நாள்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டதாகும். இந்த மாபெரும் ஊழலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார் அவர்.
பேரணியில் புதுவை காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம், அமைச்சர்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், சட்டப்பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி, தீப்பாய்ந்தான், தனவேலு, புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், கட்சியின் துணைத் தலைவர்கள் நீலகங்காதரன், பெத்தபெருமாள், பொதுச் செயலர் ஏ.கே.டி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுதேசி பஞ்சாலையில் தொடங்கிய பேரணி மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை வழியாக வழுதாவூர் சாலை வழியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT