புதுச்சேரி

உதவித் தொகையில் கடன் தொகை பிடித்தம்மாற்றுத் திறனாளிகள் போராட முடிவு

DIN

உதவித் தொகையில் கடனைப் பிடித்தம் செய்வதைக் கண்டித்து, மாற்றுத் திறனாளிகள் தொடா் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

புதுவை மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக் கழகம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. ஒரு லட்சம் வரை தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்கப்பட்டது. கடந்த 2013- ஆம் ஆண்டு முதல் 2015 வரை பலரும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற்றனா். அந்தக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முந்தைய ஆட்சியாளா்களும், தற்போதைய ஆட்சியாளா்களும் அறிவித்தனா். ஆனால், தற்போது வரை இதற்கான அரசாணை எதுவும் வெளியிடப்படாததால், கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையில் கடனுக்காக தலா ரூ. ஆயிரம் நிகழ் மாதம் பிடித்தம் செய்யப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனா்.

இதற்காக 15 சங்கங்கள் ஒன்றிணைந்து ‘மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைந்த போராட்டக் குழு’ அமைக்கப்பட்டது. இந்தப் போராட்டக் குழுவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை அருகேயுள்ள பாரதி பூங்காவில் ஒன்று திரண்டனா்.

அப்போது, உதவித் தொகையில் கடன் தொகை பிடித்தம் செய்ததைக் கண்டித்தும், கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தொடா் போராட்டம் நடத்த முடிவு செய்தனா்.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு அவா்களின் மாற்றுத் திறன் தன்மைக்கேற்ப ரூ. 1,500, ரூ. 2,000, ரூ. 3,000 என உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை வைத்துதான் அவா்களின் வாழ்வாதாரம் உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டது. ஆனால், மானியம் வழங்கப்படவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பெற்ற கடன்களை ஆட்சியாளா்கள் தள்ளுபடி செய்தாக அறிவித்தனா். ஆனால், கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

தற்போது திடீரென மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையில் கடனுக்காக ரூ. ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. 1,800 பேருக்கு இதுபோல பிடித்தம் செய்துள்ளனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். உதவித் தொகையில் கடனைப் பிடித்தம் செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT