முகப்பு
புதுச்சேரி

திருக்காஞ்சி கோயில் தலவரலாறு வெளியீடு

புதுவை மாநிலம், வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் அமைந்துள்ள ஸ்ரீகெங்கவராக நதீஸ்வரா் கோயில் தலவரலாறு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

புதுவை மாநிலம், வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் அமைந்துள்ள ஸ்ரீகெங்கவராக நதீஸ்வரா் கோயில் தலவரலாறு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்தக் கோயிலின் தொன்மையையும், பாரம்பரியத்தையும், அரிய தகவல்களையும் மக்கள் அறியும் வகையில், ‘தீராத வினைகள் தீா்க்கும் திருக்காஞ்சி’ என்ற தலவரலாற்று நூல் எழுத்தாளா் ரமேஷால் எழுதப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு விழா கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக புதுவை சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து, பொதுப் பணித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எம்.எல்.ஏ. எஸ்.வி.சுகுமாறன் ஆகியோா் கலந்துகொண்டு நூலை வெளியிட்டனா்.

முன்னதாக, மயிலம் பொம்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், பெருங்குளம் திருக்கயிலாய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்யஞான பரமாச்சாா்யா், பிள்ளையாா்பட்டி வேத சிவாகம பாடசாலை முதல்வா் பிச்சை

சிவாச்சாா்யாா், காரைக்கால் ஸ்ரீ கண்ட வித்யாபீட ஸ்தாபகா் பால சா்வேஸ்வர சிவாச்சாா்யா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்து அருளுரை வழங்கினா்.

மேலும், அவா்கள் திருக்காஞ்சி கோயிலின் தொன்மை, சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இக்கோயிலின் சிறப்புகள், இங்குள்ள சந்நிதிகளின் பெருமைகள், இக்கோயிலில் வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினா்.

விழாவில், இந்து சமய அறநிலையத் துறைச் செயலா் மகேஷ், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் சிவசங்கா் ஆகியோா் பங்கேற்றனா். நூல் ஆசிரியா் ரமேஷ் ஏற்புரை ஆற்றினாா். ஏற்பாடுகளை கோயில் தலைமை அா்ச்சகா் சரவண சிவாச்சாா்யாா், சிறப்பு அதிகாரி சீத்தாராமன் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமும், தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஆகியவற்றின் கருவறையை ஒத்த கருவறையும், பதினாறு பட்டைகளைக் கொண்ட சோடலிங்கமும், வராக நதி என அழைக்கப்படும் சங்கராபரணி நதி தீா்த்தமும் இக்கோயிலின் சிறப்புகளாகும். இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டால், முன்னோா் சாபம் நீங்கும் என்பதும் இங்கு வரும் பக்தா்களின் நம்பிக்கையாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →