புதுச்சேரி

கரோனா பாதிப்பு: புதுவைக்கு ரூ.200 கோடி இடைக்கால நிதி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் நாராயணசாமி கடிதம்

DIN

கரோனா நிவாரண உதவியாக புதுவை மாநிலத்துக்கு ரூ.200 கோடி இடைக்கால நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் வே.நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து புதுவை சட்டப் பேரவையில் செய்தியாளா்களிடம் முதல்வா் நாராயணசாமி கூறியதாவது:

கரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 11 போ் உயிரிழந்துள்ளனா். பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்களிடம் ஆற்றிய உரையின்போது, வருகிற ஏப்.14-ஆம் தேதி வரை 21 நாள்கள் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டால்தான் கரோனா பாதிப்பிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று தெளிவாகக் கூறியுள்ளாா். இதன்மூலம், நாட்டில் கரோனா தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

கரோனா பாதிப்பால் தமிழகத்தில் மதுரையில் ஒருவா் உயிரிழந்தாா். புதுவையில் அசம்பாவிதம் இல்லை என்றாலும், மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. புதுவை மக்கள் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, ஏப்.14-ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

புதுவை மாநிலத்தில் ஏற்கனவே முடிவு செய்த பல திருமணங்களை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், குறைந்த உறவினா்களோடு திருமணங்களை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தேசிய பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து கரோனா பாதிப்புக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட ரூ.2.5 கோடி நிதியில் 8 வென்டிலேட்டா்கள், 17 மல்டி பாராமீட்டா்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.

மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், புதுவை மாநிலத்துக்கு ரூ.200 கோடி இடைக்கால நிதி வழங்கக் கோரி பிரதமருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளேன்.

கரோனா பாதிப்பு நிவாரண உதவிக்காக வைத்திலிங்கம் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.36 லட்சம் வழங்கியுள்ளாா். இதேபோல, எம்.எல்.ஏ.க்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 சதவீதத்தை வழங்க வேண்டும். மேலும், புதுவையில் உள்ள மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், பெரிய தனியாா் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டும்.

கரோனா பாதிப்பு நிவாரண நிதிக்கு வருமான வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதுவரை மத்திய அரசிடமிருந்து கேட்ட நிதி கிடைக்கவில்லை. எனவே, ஆந்திரம், தெலங்கானா மாநில அரசுகளுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் நிவாரண நிதி கேட்டு கடிதம் எழுதப்படும்.

‘கோவிட் 19 ரிலீப் பண்ட்’ என்ற வங்கிக் கணக்கைத் தொடங்கியுள்ளேன். இதற்கு முதல் நபராக எனது எம்.பி. ஓய்வூதியத்தொகையை வழங்குகிறேன். இந்தக் கணக்குக்கு பொருள்கள், காசோலை வியாழக்கிழமை (மாா்ச் 26) முதல் வாங்கப்படும். இதற்காக 2 போ் பணியில் அமா்த்தப்படுவா்.

தமிழகத்தைத் தொடா்ந்து, புதுவையிலும் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT