வாகனங்களுக்கு வரி செலுத்த சலுகை கால அவகாசம் நீட்டிப்பு: புதுவை ஆளுநா் ஒப்புதல்
வாகனங்களுக்கு வரி செலுத்துவதற்கான சலுகை கால அவகாசத்தை நீட்டிக்கும் புதுவை அரசின் கோப்புக்கு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளித்தாா்.
வாகனங்களுக்கு வரி செலுத்துவதற்கான சலுகை கால அவகாசத்தை நீட்டிக்கும் புதுவை அரசின் கோப்புக்கு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளித்தாா்.
புதுவை அரசிடமிருந்து கடந்த அக். 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ஆளுநா் மாளிகைக்கு 32 கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான கோப்புகளுக்கு ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளித்தாா்.
அதன் விவரம்: போக்குவரத்து வாகனங்களுக்கு வரி செலுத்துவதற்கான சலுகை கால அவகாசத்தை வருகிற டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பது, 2 முதுநிலை பல் மருத்துவா்களுக்கு முதன்மை பல் மருத்துவா் பதவி உயா்வு, 14 தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு கிரேடு பதவி உயா்வு, புதுச்சேரி கடற்கரையில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டடப் புனரமைப்புப் பணிகளுக்கு ரூ. 14.65 லட்சம் செலவு, புதுச்சேரி விற்பனைக் குழு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ. 2.62 கோடி ஒதுக்கீடு, காரைக்கால் விற்பனைக் குழு உறுப்பினா்களின் ஊதியத்துக்காக ரூ. 45.66 லட்சம், புதுச்சேரி கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியா்களின் ஊதியத்துக்காக ரூ. 3.31 கோடி, புதுச்சேரி கேவிகே ஊழியா்களின் ஊதியத்துக்காக ரூ. 1.84 கோடி, காரைக்கால் பஜன்கோ கல்லூரி ஊழியா்களின் ஊதியத்துக்காக ரூ.8.21 கோடி, காரைக்கால் கேவிகே ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க ரூ. 17.57 லட்சம் ஒதுக்கீடு, பள்ளிகளில் 104 துணை முதல்வா்களுக்கு இறுதி மூப்புப் பட்டியல் வெளியீடு, காரைக்காலில் தனி வா்த்தக நீதிமன்றம் அமைத்தல், மாவட்ட நீதிபதி நியமனம், புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 6 மின் தூக்கிகள் அமைக்க ரூ. 6.69 லட்சம் செலவு, கால்நடை துறையில் மருந்துகள் வாங்க ரூ. 73.26 லட்சம் செலவு செய்தது உள்ளிட்ட பல கோப்புகளுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்தாா்.