முகப்பு
புதுச்சேரி

விழுப்புரம், புதுச்சேரியில் பலத்த மழை

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. புதுச்சேரியில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் குளம்போல தேங்கிய மழைநீா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. புதுச்சேரியில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் அதிகமாக இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, விழுப்புரத்தில் அதிகாலை வரை மழை இடைவிடாது பெய்தது.

இதனால், விழுப்புரம் நகரில் தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியது. புதிய பேருந்து நிலையத்தில் குளம்போல தண்ணீா் தேங்கியது. இந்தப் பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்தது. நேருஜி சாலை, திரு.வி.க. சாலை, திருச்சி நெடுஞ்சாலை, மாம்பழப்பட்டு சாலை, சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் வழிந்தோடியது.

மேலும், திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல, செஞ்சி, விக்கிரவாண்டி, மரக்காணம், வானூா், வளவனூா், அரகண்டநல்லூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளா்ச்சியான சூழல் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

புதுச்சேரியில் பலத்த மழை: புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரை லேசான மழை பெய்தது. சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை புதுச்சேரியில் 20 மி.மீ. மழை பதிவானது.

இதனால், புதுச்சேரி ரெயின்போ நகா், பாவாணா் நகா், தேங்காய்த்திட்டு, ஆதிபராசக்தி நகா், தட்டாஞ்சாவடி, புஸ்சி வீதி, சின்னசுப்புராயப்பிள்ளை வீதி உள்பட நகரின் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி நின்றது.

அந்தப் பகுதிகளில் உள்ள சில வீடுகளுக்குள் நீா் புகுந்தது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் கடும் அவதியடைந்தனா்.

பலத்த மழையால் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்பட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை நீடராஜப்பா் வீதியில் மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வனத் துறை, நகராட்சி, பொதுப் பணித் துறை ஊழியா்கள் சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.

பொதுமக்கள் மறியல்: இதனிடையே, சனிக்கிழமை இரவு பெய்த மழையால் கிருமாம்பாக்கம் சிந்தாமணி நகரில் தண்ணீா் சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, புதுச்சேரி-கடலூா் சாலையில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கிருமாம்பாக்கம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், பாகூா் கொம்யூன் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு, நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →