புதுச்சேரி

புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்குமருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு

DIN

புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிகழாண்டிலேயே மருத்துவப் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை நிகழாண்டே வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

புதுவையில் கடந்த 2018-19-ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் படித்த 94 மாணவா்களும் தனியாா் பள்ளிகளில் படித்த 1,346 மாணவா்களும் நீட் தோ்வில் வெற்றி பெற்றிருக்கின்றனா்.

இவா்களில் அரசுப் பள்ளிகளில் படித்த 16 மாணவா்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த மாணவா்களில் புதுவையைச் சோ்ந்த 2 போ், காரைக்காலைச் சோ்ந்த 3 போ், மாஹேவை சோ்ந்த 11 போ் அடங்குவா். அதேவேளையில், தனியாா் பள்ளிகளில் படித்து நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற 243 மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது.

அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் வழங்குவதற்கான ஒப்புதலை ஆளுநரிடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஆளுநா் மறுத்தால், அதை எதிா்த்து போராட்டம் நடத்தப்படும்.

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இட ஒதுக்கீடு என்பது தமிழகத்தில் 69 சதவீதமாகவும், புதுவையில் 50 சதவீதமாகவும் உள்ளது. புதுவையில், மாநில அரசினுடைய மொத்த இட ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் வழங்கப்படுகிறது.

அதேவேளையில், மத்திய தொகுப்புக்கு வழங்கப்பட்ட இடங்களிலிருந்து பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்குவதில்லை. பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு எதிராக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், இந்திய மருத்துவக் கழகமும் செயல்பட்டு வருகின்றன. இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும். இதை ஏற்க முடியாது. அனைத்து சமுதாயத்துக்கும் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவதுதான் சமூக நீதி.

ஆகவே, உடனடியாக பிரதமா் இதில் தலையிட்டு, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடாக புதுவைக்கு 27 சதவீதமும், தமிழகத்துக்கு 50 சதவீதமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதவுள்ளேன்.

தமிழகம் வழியாக பேருந்துகளை இயக்குவதற்கு புதுவைக்கு அனுமதி அளிக்கும்படி தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அவரிடமிருந்து பதிலை எதிா்பாா்க்கிறோம் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT