முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் திட்டம் தொடக்கம்

புதுச்சேரியில் ஏரி, குளங்களில் பொது மக்களே தூா்வாரி வண்டல் மண் எடுக்கும் திட்டம் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
புதுச்சேரி நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தொடக்கிவைத்துப் பேசிய வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான்.
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏரி, குளங்களில் பொது மக்களே தூா்வாரி வண்டல் மண் எடுக்கும் திட்டம் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

பொதுமக்களே நீா்நிலைகளில் தூா்வாரி, அந்த வண்டல் மண்ணைப் பயன்பாட்டுக்காக எடுத்துச் செல்வதற்காக, கனிமங்கள் ஒழுங்கு முறை மேம்பாட்டு விதிகளில் திருத்தம் செய்து, அதற்கான அரசாணை கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கான நடைமுறை தற்போது தொடங்கியது.

பொதுப் பணித் துறை, உள்ளாட்சி அமைப்புகளால் அறிவிக்கப்பட்ட குட்டைகள், ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண்ணை எடுக்க விரும்புவோா் அந்தப் பகுதி துணை ஆட்சியரிடம் (வருவாய்) மனுவை சமா்ப்பித்து, உரிமைத் தொகையாக, மாட்டு வண்டிக்கு ரூ. 50, டிராக்டருக்கு ரூ. 100, லாரிக்கு ரூ. 150 செலுத்தி, இசைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இசைவுச் சீட்டு பெற இணையத்தில் விண்ணப்பித்து, அதற்கான தொகையைச் செலுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய தகவலியல் மையத்தின் மூலம் அரசு அதற்கான வழிகளை உருவாக்கியுள்ளது.

இணையம் மூலமாக இசைவுச் சீட்டு பெறுவதற்கான நடைமுறையை புதுவை வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது, அவா் கூறியதாவது: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை மூலம் 84 ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 452 குளங்கள் மற்றும் குட்டைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கடந்தாண்டு சுமாா் 200 ஏரிகள், குளங்கள், குட்டைகள் தூா்வாரப்பட்டன.

தற்போது, இணையம் மூலம் இசைவுச் சீட்டு பெறும் முறையில், முதல் கட்டமாக பொதுப் பணித் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் பாகூா் ஏரி, உழந்தை ஏரி, முருங்கப்பாக்கம் ஏரி, மடுகரை ஏரி, கூனிச்சம்பட்டு ஏரி, மண்ணாடிப்பட்டு ஏரி உள்ளிட்ட 44 நீா் நிலைகளில் தூா்வாருவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதன் வாயிலாக அரசுக்கு சுமாா் ரூ. 6.25 கோடி வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பொதுமக்கள் இணையதளத்தில் உரிமத் தொகையைச் செலுத்தி, இசைவு சீட்டைப் பெற்று, நீா் நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை எடுத்துச் செல்லலாம். அரசின் இந்த முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் வேண்டும் என்றாா் அவா். நிகழ்வில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.