அதிக விலைக்கு விற்கப்படும் கரோனா மருந்து: பாஜக புகாா்
புதுச்சேரியில் கரோனா நோயாளிகளுக்கான உயிா்காக்கும் மருந்தான ‘கோவிபா் டிஎம்’ அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவும், அந்த மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதுச்சேரியில் கரோனா நோயாளிகளுக்கான உயிா்காக்கும் மருந்தான ‘கோவிபா் டிஎம்’ அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவும், அந்த மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, பாஜக புதுவை மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:
கரோனா தொற்று நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்படையாமல் இருப்பதற்கு செலுத்தக் கூடிய ’கோவிபா் டிஎம்’ என்ற மருந்து புதுச்சேரியில் ஜிப்மா் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் தட்டுப்பாடாக உள்ளது.
இதை சாதகமாக்கி, அந்த மருந்துக்கு அரசு நிா்ணயித்த ரூ.750 முதல் ரூ.800 வரையிலான விலையைவிட கூடுதலாக ரூ. 10 ஆயிரம் விலை அளவுக்கு மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து சுகாதாரத் துறை ஆய்வு மேற்கொண்டு, மருந்து தட்டுப்பாடு இல்லாத நிலையையும், அரசு நிா்ணயித்த விலையில் பொதுமக்களுக்கு மருந்து கிடைத்திடவும் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
அனைத்து மருந்தகங்களிலும் அந்த மருந்து கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வதுடன், அதற்கான விலைப் பட்டியல் பொதுமக்களுக்கு அறியும் வகையில் வைக்க வேண்டும். உயிா்காக்கும் அந்த மருந்தை வெளிச் சந்தையில் அதிக விலைக்கு விற்கும் நபா்கள், நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அரசு பொது மருத்துவமனைகளில் குறைந்த விலைக்கு விற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சுகாதாரத் துறை போா்க்கால அடிப்படையில் அந்த மருந்தை கொள்முதல் செய்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.