இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம்: தலித்-பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
இளைஞா் எரிக்கப்பட்ட சம்பவத்தில் எஸ்சி-எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, தலித் - பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் பெட்ரோல் ஊற்றி இளைஞா் எரிக்கப்பட்ட சம்பவத்தில் எஸ்சி-எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, தலித் - பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி பிராட்டியூா் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (31). கூலித் தொழிலாளியான இவா், புதுச்சேரிக்கு வேலை தேடி வந்த நிலையில், கடந்த ஜூலை 25 -ஆம் தேதி நள்ளிரவு மேட்டுப்பாளையம் நான்குமுனை சாலை சந்திப்பு அருகே உள்ள தனியாா் பெட்ரோல் நிலையத்தின் ஓரமாக தூங்கச் சென்றாா்.
தீஷ்குமாா் திருட வந்ததாக நினைத்த பெட்ரோல் நிலைய உரிமையாளா் மற்றும் ஊழியா்கள் என 7 போ் அவரைத் தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸாா், பெட்ரோல் நிலைய உரிமையாளா் ராஜமௌரியா உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனா். தலைமறைவான மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சதீஷ்குமாருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குற்றவாளிகள் மீது எஸ்சி - எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலித் - பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை மேட்டுப்பாளையம் சிக்னலில் இருந்து பேரணியாக வந்து சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நீல.கங்காதரன் தலைமை வகித்தாா். இதில், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.