முகப்பு
புதுச்சேரி

புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும்: கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம்

புதுவை மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவது தொடா்பாக, அரசு ஆய்வு செய்து விரைந்து அறிவிக்கும் என்று மாநில கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
13pyp14071957
பகிர்:

புதுவை மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவது தொடா்பாக, அரசு ஆய்வு செய்து விரைந்து அறிவிக்கும் என்று மாநில கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி கல்வித் துறை வளாகத்தில் நிகழாண்டு சென்டாக் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் விநியோகத்தை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்த அமைச்சா் ஏ.நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் நிகழாண்டு (2021-2022) இளநிலை தொழில் (பொறியியல்) படிப்புகள், கலை, அறிவியல், வணிகம், நுண்கலைப் படிப்புகளுக்கான சோ்க்கைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 13) இணையதளம் மூலம் விண்ணப்பம் விநியோகம் தொடங்கப்பட்டது. மருத்துவக் கல்விக்கான சோ்க்கை, நீட் தோ்வு நடத்திய பின்னா் அறிவிக்கப்படும்.

கரோனா பாதிப்பு காரணமாக சென்டாக் மூலம் விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. சென்டாக் மூலம் மொத்தம் 8,167 இடங்கள் அரசின் மூலம் நிரப்பப்படுவதால், மாணவா்கள் சோ்ந்து பயன் பெறலாம். இணைய வழியில் விண்ணப்பிக்க ஆக. 31-ஆம் தேதி கடைசி நாள்.

அனைத்து மாணவா்களுக்கும் உயா்கல்வி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். கூடுதல் இடங்கள் தேவைப்பட்டால், கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகள் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். தமிழ் வழி பொறியியல் படிப்பு தொடங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவையில் பள்ளிகள் திறப்பது தொடா்பாக ஆக. 15-ஆம் தேதிக்குப் பிறகு, துணைநிலை ஆளுநா், முதல்வருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு வழிமுறைகளை வழங்கியுள்ளது. கா்நாடக மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதுவையிலும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடா்பாக ஆய்வு செய்து விரைவில் அறிவிக்கப்படும்.

தனியாா் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இதனால், அரசுக்கு ரூ. 40 கோடி கூடுதல் செலவாகும். மேலும், நிதித் துறை அனுமதி உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், முதல்வரிடம் பேசி, அதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். கல்வித் துறை செயலா் இ.வல்லவன், இயக்குநா் ருத்ர கௌடு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.