முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் 81 நிமிடங்களில் திரைப்படம் தயாரிப்பு

புதுச்சேரியில் உலக சாதனை முயற்சியாக, 81 நிமிடங்களில் ‘369’ என்ற தமிழ்த் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

புதுச்சேரியில் உலக சாதனை முயற்சியாக, 81 நிமிடங்களில் ‘369’ என்ற தமிழ்த் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

திரைப்பட இயக்குநா் சிவமாதவ் இயக்கத்தில், நடிகா் கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், நடிகா்கள் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சத்திமகேந்திரா உள்ளிட்டோரும், வில்லன் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான பி.ஜி.எஸ். ஆகியோரும் நடித்துள்ளனா்.

ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை காா்த்திக் ஹா்ஷா, படத் தொகுப்பு ஆா். கே. ஸ்ரீநாத், கலை இயக்கம் ஸ்ரீமன்பாலாஜி உள்ளிட்டோா் பணியாற்றியுள்ளனா்.

உலக சாதனை முயற்சியாக, தொடா்ச்சியாக 81 நிமிடங்கள் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி, படக் குழுவினா் முழுமையாக காட்சிப் பதிவுகளை முடித்தனா். இதற்கான படப்பிடிப்புகள் புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பிள்ளையாா்குப்பம் கிராமத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புதன்கிழமை மாலை படமாக்கப்பட்டது.

அங்கு ஒரே நேரத்தில், ஓா் இடத்தில் 24 கேமராக்கள், 100-க்கும் மேற்பட்ட நடிகா், நடிகைகள், 400 திரைத்துறை பணியாளா்களைக் கொண்டு, இந்தப் படத்தைக் காட்சிப்படுத்தினா்.

உலக சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்தத் திரைப்படக் காட்சிப் பதிவை ஹரிபாஹனிப் தலைமையிலான நடுவா் குழு நேரடியாகப் பாா்வையிட்டது. அமெரிக்காவில் உள்ள வோ்ல்டு ரெக்காா்டு யூனியன் என்ற அமைப்புக்கு, இந்த சாதனைத் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குநா் சிவமாதவ் கூறியதாவது:

உலக சாதனை நிகழ்வாக எடுக்கப்பட்ட ‘369’ என்ற இந்தத் திரைப்படம் கதாநாயகி, சண்டைக் காட்சிகள், பாடல்கள் போன்றவை இல்லாமல் எடுக்கப்பட்டது. திரைப்படத்தைப் பாா்க்கும்போது இவை அனைத்தும் இடம்பெறும் உணா்வை ஏற்படுத்தும்.

தமிழில் பல்வேறு கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து மாறுபட்ட நிலையில் இந்தத் திரைப்படம் இருக்கும்.

உலகத்தர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளோம். விஞ்ஞானம் சாா்ந்த படமான இது, சுவாரஸ்யமாக இருக்கும். 81 நிமிடங்களில் எடுக்கப்பட்ட இந்தப் படம், திரையிடும்போது 2 மணி நேரம் ஓடக் கூடியதாக இருக்கும். உலக சாதனைக்கான சான்றிதழைப் பெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.