முகப்பு
புதுச்சேரி

புதுவைக்கான ரயில் சேவைகளை மேம்படுத்த மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தல்

புதுச்சேரி ரயில் நிலையத்தை மேம்படுத்தவும், புதிய ரயில் சேவைகளை வழங்கவும் மத்திய ரயில்வே அமைச்சரிடம், புதுவை மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி வலியுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

புதுச்சேரி ரயில் நிலையத்தை மேம்படுத்தவும், புதிய ரயில் சேவைகளை வழங்கவும் மத்திய ரயில்வே அமைச்சரிடம், புதுவை மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.12ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. அந்தப் பணிகளில் புதுவைக்கான ரயில் சேவைகளையும் மேம்படுத்த வேண்டும். புதுவை மாநிலம் காரைக்கால்-பேரளம் ரயில் பாதையை மாற்றும் பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது. நிதிப் பற்றாக்குறையால் பணியை முடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது போதிய நிதி ஒதுக்கப்பட்டதால், பணியை விரைவுபடுத்தி, வருகிற 2023-ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்.

புகழ்பெற்ற திருநள்ளாறு கோயிலுக்கு பயணிகள் ரயில் சேவையை ஏற்படுத்த வேண்டும். புதுச்சேரி-கடலூா் இடையே ரயில் சேவைக்கான நில அளவீடு இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிகிறது. சென்னை-கடலூா் வழியாக மகாபலிபுரம் ரயில் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக அது இருப்பதால், இந்தத் திட்டம் கிடப்பில் உள்ளது. இதை ரயில்வே வாரியம் முன் எடுத்து, முதல்கட்டமாக 22 கி.மீ. தொலைவுள்ள புதுச்சேரி-கடலூரை இணைக்க அனுமதி பெற வேண்டும்.

தென்னிந்தியாவின் முக்கியமான சுற்றுலா மையமாக புதுச்சேரி மாறியுள்ளதால், புதுச்சேரிக்கு கூடுதல் ரயில்களை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். புதுச்சேரியில் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அனைத்து நவீன வசதிகளுடன் புதிய ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரயில்வே அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக பட்ஜெட்டில் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்.

ஏனாம் நேரடி ரயில் சேவைக்காக சா்காா் விரைவு ரயில் சேவையை புதுச்சேரிக்கு நீட்டிக்க வேண்டும். பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட பான் இந்தியா ரயில் சேவையின் கீழ், புதுச்சேரியுடன் இணைத்து அதிக ரயில்களை இயக்க வேண்டும்.

புதுச்சேரி-கன்னியாகுமரி வாராந்திர விரைவு ரயிலை வாரம் இருமுறையாக இயக்க வேண்டும். நிறுத்தப்பட்ட புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். புதுச்சேரி-மதுரை, புதுச்சேரி-திருச்செந்தூா், புதுச்சேரி-கோவை வழித்தடங்களில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.