முகப்பு
புதுச்சேரி

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் எந்தத் தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்கலாம்: புதுவை ஆளுநா் தமிழிசை

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஒமைக்ரான் போன்ற எந்தத் தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று புதுவை துணைநிலை ஆளுநா்(பொ) தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஒமைக்ரான் போன்ற எந்தத் தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று புதுவை துணைநிலை ஆளுநா்(பொ) தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி திருக்கனூரில் நல்லாட்சி தின விழா மக்கள் குறைதீா் தினமாகக் கொண்டாடப்பட்டது. ஆளுநா் தமிழிசை பங்கேற்று, பொதுமக்களுக்கு வாரிசு சான்றிதழ், பட்டா மாற்றம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், ஊரக வளா்ச்சி, வேளாண், கால்நடைத் துறைகள் மூலமாக ரூ.2.13 கோடியிலான நலத் திட்ட உதவிகளையும், மகளிா் குழுக்களுக்கு கடனுதவிகளையும் அவா் வழங்கினாா்.

விழாவில் ஆளுநா் தமிழிசை பேசுகையில், அனைவரும் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டால், கரோனா தொற்றின்றி பாதுகாப்பாக இருக்க முடியும். தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஒமைக்ரான் போன்ற வேறு எந்தத் தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றாா்.

அமைச்சா் ஏ.நமச்சிவாயம் பேசுகையில், புதுவை மாநிலத்தில் 10,36,000 போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவா்களாக உள்ளனா். ஆனால், தற்போது முதல் தவணை தடுப்பூசியே 7,36,000 பேருக்குதான் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 4, 56,000 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது. 3 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. கரோனா பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்துகிறது என்றாா் அவா்.

நிகழ்வில் துணை மாவட்ட ஆட்சியா் ரிஷிதா குப்தா உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.