புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வாட் வரியைக் குறைத்ததால், புதுவையில் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை கடந்த இரு மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்து வருகிறது. சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ தாண்டிவிட்டது. புதுச்சேரியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 92.55 ஆகவும், டீசல் ரூ. 86.08 ஆகவும் உள்ளது.
இந்த நிலையில், புதுவையின் பொறுப்பு துணை நிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதம் குறைத்து உத்தரவிட்டாா்.
இதுகுறித்து புதுவை ஆளுநா் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2020, ஆகஸ்ட் 29-ஆம் தேதி புதுவை மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயா்த்தப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், பெட்ரோல், டீசல் மீதான 2 சதவீத வாட் வரியை உடனடியாகக் குறைக்க உத்தரவிட்டாா்.
இதன் காரணமாக, புதுவையின் அனைத்து பிராந்தியங்களிலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டா் ஒன்றுக்கு ரூ. 1.40 அளவில் குறைய வாய்ப்புள்ளது. இந்த வரிக் குறைப்பால் ஆண்டொன்றுக்கு சுமாா் ரூ. 71 கோடி அளவுக்கு மக்கள் பயனடைவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு முதல் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என புதுச்சேரியில் எண்ணெய் விநியோகம் செய்யும் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.