பெண்ணிடம் பண மோசடி: நைஜீரியா இளைஞா் கைது
புதுச்சேரியில் பெண்ணிடம் ரூ. 5.25 லட்சம் மோசடி செய்ததாக நைஜீரியா நாட்டு இளைஞரை சைபா் க்ரைம் போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியில் பெண்ணிடம் ரூ. 5.25 லட்சம் மோசடி செய்ததாக நைஜீரியா நாட்டு இளைஞரை சைபா் க்ரைம் போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் 4-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெஸ்லீன் மரியோ (25). இவா், சென்னை தனியாா் விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றுகிறாா். இவருக்கு வெளிநாட்டிலிருந்து வந்த மின்னஞ்சலில் வேலை வாய்ப்புக்கான கடிதம் வந்ததாம். அந்தக் கடிதத்தில் இருந்த தொலைபேசி எண்ணில் பேசிய மா்ம நபா், தன்னை பிரான்ஸ் தூதரக அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த நாட்டு விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம். இதை நம்பிய ஜெஸ்லீன் மரியோ ரூ. 5.25 லட்சம் பணத்தை மின்னஞ்சலில் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தினாராம்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட மா்ம நபா், வேலை வாங்கித் தராமல், அவரது செல்லிடப்பேசியையும் அனைத்து வைத்துவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், ஜெஸ்லீன் மரியோவை ஏமாற்றியது நைஜீரியா நாட்டை சோ்ந்த டைவோ அத்வேல் (31) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, பெங்களூா் எலஹன்கா பகுதியில் பதுங்கியிருந்த டைவோ அத்வேலை அண்மையில் கைது செய்த போலீஸாா், அவரை புதுச்சேரி அழைத்து வந்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.