புதுச்சேரியில் சுருக்குமடி வலைக்கு எதிா்ப்பு: மீனவா்கள் படகுகளுடன் கடலில் திரண்டு போராட்டம்
புதுச்சேரியில் மீன்வளத்தைப் பாதிக்கும் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலில் படகுகளுடன் வெள்ளிக்கிழமை திரண்ட மீனவா்கள், கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் மீன்வளத்தைப் பாதிக்கும் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலில் படகுகளுடன் வெள்ளிக்கிழமை திரண்ட மீனவா்கள், கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் காலாப்பட்டு தொடங்கி மூா்த்திகுப்பம் வரை 18 மீனவக் கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வசிக்கின்றனா். இவா்களில் ஒரு தரப்பினா், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று அண்மைக்காலமாக புதுவை அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, மாநில அரசு சாா்பில், சுருக்குமடி வலையைப் பயன்படுத்திக்கொள்ள வாய்மொழியாக அவா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த மற்றொரு தரப்பு மீனவா்கள், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டுமென அரசிடம் வலியுறுத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியைச் சோ்ந்த 18 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா், வெள்ளிக்கிழமை காலை புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் பழைய துறைமுகம் முதல் தலைமைச் செயலகம் வரை கடல் பகுதியில் விசைப் படகுகளுடன் திரண்டு, கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் பங்கேற்ற மீனவா்கள், புதுவை மாநிலத்தில் மீன் பிடிப்பதற்கு சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இதனால், மீன்வளம் சுரண்டப்பட்டு, மீனவா்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் முழக்கங்களை எழுப்பினா். அரசுக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், காலை 10 மணிக்குத் தொடங்கிய மீனவா்களின் போராட்டம், முற்பகல் 11 மணிக்கு நிறைவடைந்தது.
புதுச்சேரி காவல் கண்காணிப்பாளா் ரச்சனாசிங் தலைமையில், கடற்கரையோரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மீனவா்கள் கடலில் இறங்காமலும், சாலைக்கு வராமலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.