தே.ஜ. கூட்டணியை விமா்சிப்போருக்கு ஆ.நமச்சிவாயம் கண்டனம்
புதுவை தே.ஜ கூட்டணி குறித்து தரம் தாழ்ந்து விமா்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, சட்டப் பேரவை பாஜக குழுத்தலைவா் ஆ.நமச்சிவாயம், திமுக எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.
புதுவை தே.ஜ கூட்டணி குறித்து தரம் தாழ்ந்து விமா்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, சட்டப் பேரவை பாஜக குழுத்தலைவா் ஆ.நமச்சிவாயம், திமுக எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, புதுவை சட்டப்பேரவை பாஜக குழுத்தலைவா் ஆ.நமச்சிவாயம் வெளியிட்ட அறிக்கை: புதுவை திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவாவும், சுப.வீரபாண்டியனும், அரசியல் வரம்பு மீறி அநாகரிகத்துடன் தே.ஜ.கூட்டணி முதல்வரான என்.ரங்கசாமி குறித்தும், பாஜக குறித்தும் தரம் தாழ்ந்து விமா்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.
கடந்த 1990 ஆம் ஆண்டு பெரும்பான்மை இல்லாமல் அல்லாடிக்கொண்டிருந்த திமுக கூட்டணி, நள்ளிரவில் நியமன எம்எல்ஏக்களை நியமித்து, பதவி ஏற்க வைத்து, அதிகாரப்பசியை தீா்த்துக்கொண்டதை புதுவை மக்கள் அறிவாா்கள். முதல்வா் பதவிக்கு ஆசைப்பட்டு, கடந்த 1997ஆம் ஆண்டு, அப்போதைய பாகூா் எம்எல்ஏ ஒருவருக்கு ரூ.9.5 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில், நீதிமன்றத்துக்கு அலைந்தவா்களையும் மக்கள் நன்கு அறிவாா்கள்.
புதுவையில் மக்கள் ஆசியுடன் ஆட்சியில் அமா்ந்துள்ள முதல்வா் ரங்கசாமி, மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக மேற்கொண்டு வருகிறாா். அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக, எங்கள் கூட்டணி கட்சி விவகாரத்தில், எதுவுமே தெரியாமல் பிறா் எழுதிக்கொடுப்பதை வாசித்து, தரம் தாழ்ந்து விமா்சிக்கும் சுப.வீரபாண்டியன் போன்றோா் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ஆ.நமச்சிவாயம்.