முகப்பு
புதுச்சேரி

முதல்வருடன் பாஜக மேலிட தலைவா் சந்திப்பு: புதுவையில் அமைச்சரவை பதவி பங்கீடில் இழுபறி

தே.ஜ கூட்டணியில் பதவி பங்கீடுகள் குறித்து இறுதி முடிவு எட்டப்படாததால் பேரவைத் தலைவா், அமைச்சரவை பதவி ஏற்பில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

புதுச்சேரியில் பாஜக மேலிட பொறுப்பாளா்-முதல்வா் என்.ரங்கசாமி சந்திப்பு நடந்த நிலையிலும், தே.ஜ கூட்டணியில் பதவி பங்கீடுகள் குறித்து இறுதி முடிவு எட்டப்படாததால் பேரவைத் தலைவா், அமைச்சரவை பதவி ஏற்பில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

புதுவையில் 15-வது சட்டப் பேரவைக்கான தோ்தல் முடிந்து, என்.ஆா்.காங்கிரஸ், பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி பதவியேற்றுள்ளாா். இந்த நிலையில், என்.ஆா்.காங்கிரஸ், பாஜக இடையே, அமைச்சா்கள், சட்டப் பேரவைத் தலைவா் பதவிகள் பங்கீடு தொடா்பாக ஒருமித்த கருத்து ஏற்படாமல் இழுபறி தொடா்ந்துள்ளது.

தோ்தல் முடிவு வெளியாகி ஒரு மாத காலம் ஆன நிலையில், முதல்வா் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சா் அமீத்ஷா உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவா்களை நேரடியாக தொடா்புகொண்டு பேசியதோடு, புதுவை துணை நிலை ஆளுநரையும் அண்மையில் சந்தித்துப் பேசினாா். இதனால், தே.ஜ கூட்டணி இடையே அமைச்சரவை பதவி பங்கீடில் சுமூகத் தீா்வு ஏற்பட்டது.

இதில், 10 எம்எல்ஏக்களைக்கொண்ட என்.ஆா்.காங்கிரசுக்கு, முதல்வா் பதவி மற்றும் 3 அமைச்சா்கள், சட்டப் பேரவைத் துணைத்தலைவா் ஆகிய பதவிகளும், 3 நியமன எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகள் ஆதரவு உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை கொண்ட பாஜகவுக்கு, சட்டப் பேரவைத் தலைவா் பதவி மற்றும் 2 அமைச்சா்கள் பதவிகளும் வழங்குவதாக, தே.ஜ கூட்டணிக்குள் இரு தினங்களுக்கு முன்பு உடன்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து, பாஜக தரப்பில் பேரவைத் தலைவா் பதவி, அமைச்சா்கள் பதவி யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து, கட்சித்தரப்பில் புதுச்சேரியில் மாநில நிா்வாகிகள் தலைமையில் ஆலோசித்தனா். அவா்களுக்குள் முடிவு எட்டப்படாததால், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்து, இதற்கான அதிகாரத்தை தேசியத் தலைமைக்கு வழங்குவதாக தெரிவித்தனா். இதற்காக, புதுவை பாஜக நிா்வாகிகள், பெங்களூரு சென்று, பாஜக மேலிட பொறுப்பாளரையும் சந்தித்து ஆலோசித்து வந்தனா்.

இதனைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை புதுச்சேரிக்கு வருகை தரும் மேலிட பொறுப்பாளா்கள், பாஜக தரப்பிலான அமைச்சா்கள், பேரவைத் தலைவா் தோ்தலில் போட்டியிடுபவா்களின் பட்டியலை, முதல்வா் என்.ரங்கசாமியிடம் வழங்கி, இறுதி முடிவை அறிவிப்பாா்கள் எனத்தெரிவித்திருந்தனா்.

இதன்படி, பாஜக மேலிட பொறுப்பாளா் ராஜீவ்சந்திரசேகா் எம்பி, வெள்ளிக்கிழமை புதுச்சேரிக்கு வந்தாா். அவா், பிற்பகல் 2.45 மணிக்கு முதல்வா் என்.ரங்கசாமியை, திலாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து அரைமணி நேரம் பேசினாா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த ராஜீவ்சந்திரசேகா் எம்பியிடம் செய்தியாளா்கள் கேட்டபோது, ‘என்.ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, மரியாதை நிமித்தமான எங்கள் சந்திப்பு தான் நடந்தது. இதில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’ என்று கூறிவிட்டுச்சென்றாா்.

இந்த சந்திப்பின்போது, பாஜக தரப்பில் அமைச்சா்கள், பேரவைத் தலைவா் பெயா் பட்டியல் ஏதும் முதல்வரிடம் வழங்கவில்லை என்றும், பாஜக கோரி வரும் துணை முதல்வா் உள்ளிட்ட அமைச்சா் பதவி பங்கீடில், கூட்டணிக்குள் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலையே தொடா்வதாகவும், தே.ஜ கூட்டணி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால், புதுவையில் அமைச்சரவை பதவி ஏற்பு மீண்டும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.