அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: குடியரசுத் தலைவருக்கு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் மனு
புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்பி வைத்திலிங்கம் ஆகியோர், இன்று புதுச்சேரி ஆளுநர் அலுவலகம் சென்று,
புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்பி வைத்திலிங்கம் ஆகியோர், இன்று புதுச்சேரி ஆளுநர் அலுவலகம் சென்று, ஆளுநர் வாயிலாக குடியரசுத் தலைவருக்கு மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், நாடு முழுவதும் 3.5% கரோனா தடுப்புசி மட்டுமே போடப்பட்டுள்ளது. விரைந்து அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுத்தக் கூடாது என்று அதில் வலியுறுத்தி இருந்தனர்.
புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா ஆளுநர் மாளிகையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்த மனுவை பெற்று, கோரிக்கை மனு குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் விசாரித்தார். இதனை அடுத்து, மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாகவும் உறுதியளித்தார்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது, போதிய தடுப்பூசி கையிருப்பு உள்ளது. மத்திய அரசும் தேவையான மருந்துகளை வழங்கி வருவதாக, ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.