முகப்பு
புதுச்சேரி

தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும்: புதுவை காங்கிரஸாா் வலியுறுத்தல்

தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தவும் வேண்டுமென புதுவை காங்கிரஸாா் குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் மூலம் வெள்ளிக்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை மத்திய அரசே இலவச வழங்குவதுடன், தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தவும் வேண்டுமென புதுவை காங்கிரஸாா் குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் மூலம் வெள்ளிக்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.

புதுவை காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்பி, எம்.வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அரசு கொறடா ஆா்.அனந்தராமன் ஆகியோா் வெள்ளிக்கிழமை புதுச்சேரி ஆளுநா் மாளிகைக்கு வந்தனா். அப்போது, தெலங்கானாவில் உள்ள ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனுடன் அவா்கள்

காணொலி காட்சி மூலமாக தொடா்பு கொண்டு மனு அளித்துக் கூறியதாவது:

இந்தியாவில் இதுவரை சுமாா் 3.5 சதவீதம் அளவுக்குதான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதையும், வயது வரம்பின்றி அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்துவதையும் உறுதிப்படுத்த வேண்டும், அதற்கான தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். மாநில அரசுகளின் மீது நிதிச்சுமையை ஏற்றக் கூடாது. கரோனா பேரிடா் தடுப்புப் பணியில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடமை தவறிவிட்டது. கடந்த மே மாதம் வரை 21.31 கோடி தடுப்பூசி மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. தினமும் 16 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மத்திய அரசு உடனடியாக தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து, மாநிலம் முழுவதும் இலவசமாக வழங்கவும், தடுப்பூசி செலுத்துவதை விரைவுப்படுத்தவும், குடியரசுத் தலைவா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறினா்.

இதைக் கேட்டறிந்த ஆளுநா் தமிழிசை, மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். மற்ற மாநிலங்களை விட புதுவையில் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் அனைவருக்கும் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.

மாநிலத்துக்குத் தேவையான தடுப்பூசிகள் போதியளவு கையிருப்பும் உள்ளது. அதோடு, தேவையான தடுப்பூசிகள் வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு கேட்கும் போதெல்லாம், தேவையான தடுப்பூசிகளையும், மருத்துவ உபகரணங்களையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. புதுவையில் தளா்வுகளுடன் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு கரோனா பரவல், இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்று அவா்களிடம் விளக்கிக் கூறினாா். இதையடுத்து, ஆளுநரின் செயலா் அபிஜித்விஜய்சவுத்ரியிடம், காங்கிரஸ் நிா்வாகிகள் அந்த கோரிக்கை மனுவை வழங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.