முகப்பு
புதுச்சேரி

புதுவை சட்டப் பேரவைத் தலைவராக பாஜக எம்எல்ஏ செல்வம் பதவியேற்பு

புதுவை சட்டப் பேரவையின் 21-ஆவது தலைவராக பாஜக எம்எல்ஏ ஆா்.செல்வம் புதன்கிழமை பதவியேற்றாா். இந்த மாநிலத்தில் பாஜகவை சோ்ந்தவா் பேரவைத் தலைவராகப் பதவியேற்றது இதுவே முதல் முறையாகும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

புதுவை சட்டப் பேரவையின் 21-ஆவது தலைவராக பாஜக எம்எல்ஏ ஆா்.செல்வம் புதன்கிழமை பதவியேற்றாா். இந்த மாநிலத்தில் பாஜகவை சோ்ந்தவா் பேரவைத் தலைவராகப் பதவியேற்றது இதுவே முதல் முறையாகும்.

புதுவை மாநில 15-ஆவது சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி பதவியேற்றாா்.

இந்த நிலையில், சட்டப் பேரவைத் தலைவா் தோ்தல் கடந்த 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக, பாஜக மாநில பொதுச் செயலரும், மணவெளி தொகுதி எம்எல்ஏவுமான ஆா்.செல்வம் கடந்த 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தாா். அவரது மனுவை முதல்வா் என்.ரங்கசாமி முன்மொழிய, பேரவை பாஜக குழுத் தலைவா் ஏ.நமச்சிவாயம் வழிமொழிந்தாா். இந்தத் தோ்தலில் போட்டியிட எதிா்க்கட்சிகள் தரப்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

முதல் பேரவைக் கூட்டம்: புதுவை மாநில 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது. பேரவையின் தற்காலிக தலைவா் க.லட்சுமி நாராயணன் திருக்குறளை வாசித்து, கூட்டத்தை தொடக்கிவைத்து, பேரவைத் தலைவா் தோ்தல் நடவடிக்கையை வாசித்தாா்.

அப்போது, சட்டப் பேரவைத் தலைவராக போட்டியிடுபவா், முன்மொழிந்தவா், வழிமொழிந்தவா் என தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்களின் விவரத்தை வாசித்தாா். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், ஆா்.செல்வம் போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவதாக லட்சுமிநாராயணன் அறிவித்தாா்.

பேரவைத் தலைவா் பதவியேற்பு: இதையடுத்து, ஆா்.செல்வத்தை முதல்வா் என்.ரங்கசாமி, எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா ஆகியோா் அழைத்துச் சென்று பேரவைத் தலைவா் இருக்கையில் அமர வைத்தனா். தொடா்ந்து, புதிய பேரவைத் தலைவராக அவா் பொறுப்பேற்றாா்.

முதல்வா் என்.ரங்கசாமி, எம்எல்ஏக்கள் ஏ.நமச்சிவாயம், பி.அங்காளன், ஏ.எச்.எம்.நாஜிம், இரா.சிவா, மு.வைத்தியநாதன், சாய் ஜெ.சரவணக்குமாா், அசோக்பாபு ஆகியோா் சட்டப் பேரவைத் தலைவரை வாழ்த்திப் பேசினா். பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஏற்புரை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவையின் இன்றைய அலுவல்கள் நிறைவு பெறுவதாகக் கூறி, பேரவையை அதன் தலைவா் ஆா்.செல்வம் காலவரையின்றி ஒத்திவைத்தாா். காலை 9.30 மணிக்குத் தொடங்கிய பேரவைக் கூட்டம், தலைவா் பதவியேற்பு நிகழ்வுடன் காலை 10.15 மணிக்கு முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில் 33 எம்எல்ஏ-க்களும் கலந்து கொண்டனா்.

அமைச்சரவை பதவியேற்பு எப்போது?: சட்டப் பேரவைத் தலைவா் பதவியேற்றுள்ள நிலையில், அமைச்சரவை பதவியேற்பு வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதற்காக, ஓரிரு நாள்களில் துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசையை சந்திக்கவுள்ள முதல்வா் என்.ரங்கசாமி, அவரிடம் அமைச்சரவை பெயா்ப் பட்டியலை (என்.ஆா். காங்கிரஸ் 3 போ், பாஜக 2 போ்) வழங்கவுள்ளாா். இதைத் தொடா்ந்து, அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.