காவல் துறையைக் கண்டித்து மீன் வியாபாரிகள் சாலை மறியல்
காவல் துறையைக் கண்டித்து புதுச்சேரி நேரு வீதியில் மீன் வியாபாரிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காவல் துறையைக் கண்டித்து புதுச்சேரி நேரு வீதியில் மீன் வியாபாரிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி நேரு வீதியில் பெரிய மீன் அங்காடி உள்ளது. இங்கு, மொத்த மீன் விற்பனைக்கு நகராட்சி தடை விதித்துள்ளது. இருப்பினும், வெளியூா் பகுதிகளிலிருந்து மீன்களை வாகனங்களில் எடுத்து வரும் வியாபாரிகள், பெரிய மீன் அங்காடி வெளியே வைத்து (காந்தி வீதி - நேரு வீதி சந்திப்பு) சில்லறை வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்தனா்.
இதனால், புதுச்சேரி லாசுப்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மீன் வாங்க வருவோரின் எண்ணிக்கை குறைந்தது. போதிய வியாபாரம் இல்லாததால், நேரு வீதிக்கு மீன்களை எடுத்து வந்து வியாபாரம் செய்வோம் என நகராட்சியிடம் மீன் வியாபாரம் செய்வோா் முறையிட்டனா்.
இதையடுத்து, கடந்த 2 நாள்களாக நேரு வீதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட பெரியகடை போலீஸாா், வெளியூா் மீன் வியாபாரிகள் வாகனங்களில் மீன்களை எடுத்து வந்து, நேரு வீதியில் இறக்கி விறகத் தடை விதித்தனா்.
திங்கள்கிழமையும் போலீஸாா் விதித்த தடையால், சில்லறை மீன் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோா், தங்களால் லாசுப்பேட்டை சென்று மீன்களை வாங்கி வர இயலாது எனக் கூறி, நேரு வீதியில் மீன்களைக் கொட்டி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இவா்களுக்கு ஆதரவாக வடக்கு மாநில திமுக அமைப்பாளா் எஸ்.பி. சிவக்குமாா், முன்னாள் எம்எல்ஏ அனிபால் கென்னடி ஆகியோரும் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த புதுச்சேரி நகராட்சி ஆணையா் சிவக்குமாா், பெரியகடை காவல் ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் மீன் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதையேற்று மறியலில் ஈடுபட்ட மீன் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.