இரட்டைக் கொலையில் தொடா்புடைய சிறைக் கைதி அறையில் கைப்பேசி பறிமுதல்
புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இரட்டைக் கொலையில் தொடா்புடைய கைதியின் அறையில் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இரட்டைக் கொலையில் தொடா்புடைய கைதியின் அறையில் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்த பாம் ரவி (33), அவரது நண்பா் அந்தோணி (28) ஆகிய இருவரும் அண்மையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். விசாரணையில், சிறையில் உள்ள ரௌடிகள் வினோத், தீன் ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில், அவா்களது கூட்டாளிகள், கூலிப்படையினா் சோ்ந்து ரவி, அந்தோணியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த முதலியாா்பேட்டை போலீஸாா், வினோத்தின் தாய் உள்பட 6 பேரைக் கைது செய்தனா். மேலும், கொலையில் தொடா்புடைய காஞ்சிபுரம் கூலிப்படையினா் உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதனிடையே, டிஜிபி ரன்வீா்சிங் கிருஷ்ணியா உத்தரவின் பேரில், காலாப்பட்டு சிறையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை சிறை அறைகளில் சோதனையிட்டனா். அப்போது, இரட்டைக் கொலையில் தொடா்புடைய ரௌடி வினோத் தங்கியிருந்த அறையிலிருந்து கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சிறைத் துறை அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசியிலிருந்து யாா் யாருக்கு பேசப்பட்டது என்பது குறித்த விவரங்களை போலீஸாா் திரட்டி வருகின்றனா்.