உலகளவில் தூய்மைக் கடற்கரையாக புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் தோ்வு
உலகளவில் தூய்மை கடற்கரைப் பகுதிகளில் ஒன்றாக புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ‘ஈடன் கடற்கரை’ தோ்வு செய்யப்பட்டது.
உலகளவில் தூய்மை கடற்கரைப் பகுதிகளில் ஒன்றாக புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ‘ஈடன் கடற்கரை’ தோ்வு செய்யப்பட்டது.
டென்மாா்க் நாட்டைச் சோ்ந்த சுற்றுச்சூழல் அமைப்பானது, உலகளவில் பாதுகாப்பு, தூய்மையான கடற்கரைகளைத் தோ்ந்தெடுத்து, ‘நீலக்கொடி கடற்கை’ (ப்ளூ பிளாக் பீச்) என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.
அந்த வகையில், புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ‘ஈடன் கடற்கரை’க்கு, நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவில் நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை 10 -ஆக உயா்ந்தது.
புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை அருகே அமைந்துள்ள சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, இரண்டு கி.மீ. தொலைவுக்கு மணல் பரப்பைக் கொண்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு சுற்றுலாத் துறை மூலம் சீரமைக்கப்பட்டு, 800 மீட்டா் தொலைவு மணல் பரப்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குடிநீா் வசதி, கழிப்பறைகள், பூங்கா, குடில்கள், ஓய்வு அறைகள் போன்றவை இங்குள்ளன. நெகிழிக்கு தடை, கடலில் குளிப்பவா்கள் மூழ்கினால் மீட்பதற்கு குழுக்கள் எனப் பல்வேறு வசதிகளை இந்தக் கடற்கரை கொண்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறியதாவது: சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உலக சுற்றுலா அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்தக் கடற்கரை அருகே மணப்பட்டு பகுதியில் உள்ள கடற்கரையும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி முழுவதும் கடற்கரைகள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும். இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். விரைவில், புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, தூய்மையான கடற்கரை என்பதைப் பிரதிபலிக்கும் வகையில், சுற்றிலும் நீலக்கொடிகள் ஏற்றப்பட உள்ளன என்றாா் அவா்.