புதுச்சேரி

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000: புதுவை நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

DIN

புதுவையில் 22 வயது முதல் 55 வயது வரையிலான ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் முதல்வர் என்.ரங்கசாமி அறிவித்தார்.

புதுவை சட்டப்பேரவையின் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் என்.ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசியதாவது:
நிகழ் நிதியாண்டு (2022-23) வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு ரூ.10,696.61 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.8,675.65 கோடி வருவாய் செலவினங்களுக்காகவும், ரூ.2,020 கோடி மூலதனச் செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சொந்த வருவாய் ரூ.6,557.23 கோடியாகும். மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,729.77 கோடியாகும்.

மேலும், நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.1,889.61 கோடியை கடன் மூலம் திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுவை அரசின் (31.3.2022) மொத்த நிலுவைக் கடன் ரூ.9,859.20 கோடியாகும்.

முக்கிய அம்சங்கள்: 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள்பட்ட, அரசின் எந்தவித மாதாந்திர உதவித் தொகையும் பெறாத, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும்.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி நிகழாண்டு ரூ.2 கோடியாக வழங்கப்படும்.

புதுச்சேரியில் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் விரைவில் நிறுவப்படும். விளையாட்டுக்கு தனித் துறை அமைக்கப்படும்.

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
காவல் துறையில் 1,044 பணியிடங்கள் நிரப்பப்படும்: காவல் துறையில் மொத்தம் 1,044 பணியிடங்கள், நேரடி தேர்வின் மூலம் நிரப்பப்படும்.

காரைக்கால்-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: காரைக்கால் துறைமுகம்-இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து நிகழாண்டு தொடங்கப்படும். சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகக் கழகத்துடன் இணைந்து, புதுவை துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணிகள் நிகழாண்டு முதல் செயல்படத் தொடங்கும்.
காரைக்காலில் புதிய அரசு மருத்துவக் கல்லுôரி கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதுவையில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் 25 மின்சார பேருந்துகள், 50 மின்சார ஆட்டோக்கள் புதிதாக இயக்கப்படும் என்றார் முதல்வர் என்.ரங்கசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT