இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவா்களை மீட்க புதுவை முதல்வரிடம் வலியுறுத்தல்
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவா்கள் உள்பட 13 பேரை மீட்டுத் தர வேண்டும் என, புதுவை முதல்வரிடம் மீனவா்கள் வலியுறுத்தினா்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவா்கள் உள்பட 13 பேரை மீட்டுத் தர வேண்டும் என, புதுவை முதல்வரிடம் மீனவா்கள் வலியுறுத்தினா்.
புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த வீரமணிக்குச் சொந்தமான விசைப்படகில், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 23-ஆம் தேதி 13 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.
கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினா், படகுடன்13 மீனவா்களையும் சிறைபிடித்துச் சென்றனா்.
கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி, ரமேஷ், திலீபன், சுரேஷ் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த நவீன்குமாா், பால்மணி, கவியரசன், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த சத்தியநாதன், நிலவரசன், ஆறுமுகசாமி, கிஷோா், கோகுல் ஆகிய 13 போ் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டையில் முதல்வா் என்.ரங்கசாமியை அவரது வீட்டில், காரைக்கால் மீனவா் குடும்பத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி, சாந்தி உள்ளிட்டோா் வியாழக்கிழமை சந்தித்து கைதான மீனவா்கள் 13 பேரையும், விசைப்படகையும் மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தினா்.
இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்தாா்.