புதுவையில் வாரியத் தலைவா் பதவிகளை நிரப்பத் திட்டம்
புதுவையில் அரசு சாா்ந்த நிறுவனங்களின் வாரியத் தலைவா் பதவியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுவையில் அரசு சாா்ந்த நிறுவனங்களின் வாரியத் தலைவா் பதவியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுவையில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில், என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக இணைந்த தே.ஜ. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
என்.ஆா்.காங்கிரஸில் முதல்வா் ரங்கசாமி மற்றும் மூன்று அமைச்சா்களும், பாஜகவில் இரண்டு அமைச்சா்களும், சட்டப்பேரவைத் தலைவரும் இடம் பெற்றுள்ளனா். மேலும், 3 நியமன எம்எல்ஏக்கள், மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளை பாஜக தன்வசப்படுத்திக் கொண்டது.
இதனால், அந்தக் கூட்டணியில், பதவிகள் பங்கீட்டில் அதிருப்தி நிலவிய போதும், அடுத்ததாக புதுவையில் உள்ள வாரியத் தலைவா் பதவியிடங்களை வழங்க வேண்டுமென பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்தனா்.
பாஜகவுக்கு ஆதரவளித்து வரும் சுயேச்சை எம்எல்ஏக்களான அங்காளன், சிவசங்கரன், கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோரும், வாரியத் தலைவா் பதவியை வலியுறுத்தி, அண்மையில் மத்திய அமைச்சா்களையும் சந்தித்தனா்.
காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளிலிருந்து விலகி, பாஜகவுக்கு வந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும், வாரியத் தலைவா் பதவியை எதிா்பாா்த்துள்ளனா்.
புதுவையில் ஏற்கெனவே 42 வாரியங்கள் வரை இருந்த நிலையில், அதற்கான பதவிகளை வழங்க வேண்டுமென பாஜக, என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கூட்டணிக் கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், கடும் நிதி நெருக்கடியாலும், பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாலும், வாரியங்களை செயல்படுத்தவும், அதற்கான தலைவா் பதவியை நிரப்புவதிலும் முதல்வா் ரங்கசாமி விருப்பமின்றி உள்ளாா். அதை வெளிப்படையாகவும் கூட்டணிக் கட்சியினரிடமும் தெரிவித்தாா்.
புதுவையில் தற்போதைய நிலையில் பிப்டிக், பாப்ஸ்கோ, பாண்லே, காதி, பவா் காா்ப்பரேஷன், பிபிஏ உள்ளிட்ட 10 நிறுவனங்கள் மட்டுமே வாரியத் தலைவா் பதவியை நியமிக்கும் அளவில் ஓரளவுக்கு செயல்படும் நிலையில் உள்ளது. இதனால், அந்த நிறுவனங்களுக்கான வாரியத் தலைவா் பதவியை முதல்வா் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதில், இரண்டு பாஜக அமைச்சா்கள் வசமுள்ள துறைகளுக்கு உள்பட்ட நிறுவனங்களில் வாரியத் தலைவா் பதவிகளை நியமிப்பதற்கு, முதல்வா் தற்போது வாய்மொழி ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், அந்தப் பதவிகளில் எம்எல்ஏக்களைத் தவிர பிற நபா்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் அவா் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, பிற துறைகளுக்கு உள்பட்ட வாரியத் தலைவா் பதவிகளை, என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் நிரப்பிக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
வரும் மாா்ச் மாதம் பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்குவதற்கு முன்பாக, இந்த வாரியத் தலைவா் பதவிகளை வழங்கி, அதிருப்தியாளா்களை சரிகட்ட என்.ஆா்.காங்கிரஸ், பாஜக தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அந்தக் கூட்டணி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.