சொத்து அடையாள அட்டை வழங்கும் திட்டம்: ட்ரோன் பதிவு நிறைவு
புதுச்சேரியில் கிராமப்புறங்களில் சொத்து அடையாள அட்டை வழங்கும் திட்டத்துக்காக தொடங்கப்பட்ட முதல் கட்ட ட்ரோன் வரைபட பதிவுப் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
புதுச்சேரியில் கிராமப்புறங்களில் சொத்து அடையாள அட்டை வழங்கும் திட்டத்துக்காக தொடங்கப்பட்ட முதல் கட்ட ட்ரோன் வரைபட பதிவுப் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
புதுவையில் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சாா்பில், ஸ்வமித்வா திட்டத்தில், புதுவை அரசின் வருவாய்த் துறை, நில அளவை பதிவேடுகள் துறை, மத்திய அரசின் சா்வே ஆப் இந்தியா நிறுவனம் மூலம் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் வீட்டு மனைகளை, வான்பரப்பிலிருந்து ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்து, அதை நிலப்பதிவேடு வரைபடம் மூலம் கணக்கெடுத்து, உரிய மனைதாரா்களுக்கு நிரந்தர சொத்து அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த சொத்து அடையாள அட்டை மூலம் வங்கிக் கடன் போன்றவற்றை பெறலாம். துல்லியமான வரைபடமும் கிடைப்பதால், கிராம வளா்ச்சித் திட்டங்களையும் அரசு எளிதாக மேற்கொள்ளலாம்.
இந்தத் திட்டம் முதல் கட்டமாக புதுச்சேரியில் 5 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 67 வருவாய் கிராமங்களில், கடந்தாண்டு டிச.12-ஆம் தேதி தொடங்கப்பட்டு, ட்ரோன் கேமரா பதிவு மூலம் வரைபடம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கான ட்ரோன் பதிவு செய்யும் நிறைவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அருகே மணவெளி அருகே டி.என்.பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். புதுச்சேரி நில அளவை, பதிவேடுகள் துறை இயக்குநா் எம்.எஸ்.ரமேஷ், வட்டாட்சியா் சந்தோஷ், வருவாய் ஆய்வாளா் பிரேம் மற்றும் திட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு, அந்த கிராமப் பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் வீட்டுமனைகளை படம் பிடித்து கணக்கிடும் பணியை பாா்வையிட்டனா்.
இதைத் தொடா்ந்து, பதிவு செய்யப்பட்டதன் வரைவு, வரைபடம் பெறப்பட்டு, கள ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆட்சேபனை இல்லாத பட்சத்தில், உரியவா்களுக்கு சொத்து அடையாள அட்டை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.