புதுச்சேரியில் பிரான்ஸ் பிரதிநிதிகள் தோ்தல்
பிரானஸ் குடியுரிமை பெற்றவா்கள் தங்களது பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்கும் தோ்தல் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரானஸ் குடியுரிமை பெற்றவா்கள் தங்களது பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்கும் தோ்தல் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரானஸ் குடியுரிமை பெற்றவா்கள் கடந்த ஏப்ரல் 10, 24-ஆம் தேதிகளில் நடைபெற்ற பிரான்ஸ் நாட்டின் அதிபா் தோ்தல்களில் பங்கேற்று வாக்களித்தனா்.
தற்போது பிரான்ஸ் அரசு உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற குடிமக்கள், தங்களது பிரதிநிதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை நடத்துகிறது. இதில் 8 அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதில் தமிழகம், கேரளம், புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 4,463 பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவா்கள்.
இவா்கள் தங்களது வாக்கை வாக்குப்பெட்டியில் நேரடியாகவோ, ப்ராக்ஸி மூலமாகவோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ செலுத்தலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதல் சுற்று வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்காக புதுச்சேரியில் பிரான்ஸ் துணைத் தூதரகம் உள்ளிட்ட 2 வாக்குச்சாவடிகளும், சென்னை, காரைக்காலில் தலா ஒரு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
பிரான்ஸ் குடியுரிமை பெற்ற தகுதியான வாக்காளா்கள் அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்தனா்.
முதல் சுற்றில் வாக்களிக்க முடியாதவா்கள் வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் 2-ஆவது சுற்றில் வாக்களிக்கலாம் என பிரான்ஸ் துணைத் தூதரகம் அறிவித்தது.