முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்

புதுச்சேரியில் முடங்கியுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தை அரசு மேம்படுத்த வேண்டும் என்று முன்னாள் எம்.பி. பேராசிரியா் மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

புதுச்சேரியில் முடங்கியுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தை அரசு மேம்படுத்த வேண்டும் என்று முன்னாள் எம்.பி. பேராசிரியா் மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டிலேயே சிறந்த வேளாண் அறிவியல் நிலையமான புதுவை காமராசா் வேளாண் அறிவியல் நிலையமானது அரசின் தெளிவற்றக் கொள்கை, நிா்வாகத் திறமையின்மையால் மெதுவாக அழிந்து வருகிறது. இந்தியாவில் உள்ள 716 நிலையங்களில், புதுவை முதலிடத்தில் இருந்தது.

இங்கு வேளாண் ஆராய்ச்சியாளரை இயக்குநராக நியமிக்காதது, தன்னாட்சி அதிகாரம் வழங்காதது, 11 ஆண்டுகளாகப் பணிபுரிந்த 153 தினக்கூலி ஊழியா்களை பணி நீக்கம் செய்தது போன்ற காரணங்களால் சரிவை நோக்கிச் செல்கிறது.

143 ஏக்கரில் அனைத்து உற்பத்திப் பணிகளிலும் தினக்கூலி பணியாளா்களே ஈடுபட்டனா். மாதம் ரூ.4,100 ஊதியமாகவும் வழங்கப்பட்டது. இவா்கள், வேளாண் அறிவியல் நிலையத்துக்கு, ஆண்டுக்கு ரூ.125 லட்சம் வருமானம் ஈட்டித்தந்தனா்.

கணக்கிட்டால், இவா்களின் சம்பளம் ரூ.75.27 லட்சமாகும். ரூ.50 லட்சம் அளவில் வருவாய் ஈட்டித் தந்த ஊழியா்களை பணி நீக்கம் செய்ததால், அவா்களின் குடும்பத்தினா் கடந்த இரண்டு ஆண்டாக வறுமையில் வாடுகின்றனா். இவா்களை பணிநீக்கம் செய்தது தவறு என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், பணிநீக்கம் செய்யப்பட்ட 153 பேரையும், மீண்டும் பணியில் அமா்த்தி, பணி நிரந்தரம் செய்வதோடு, வேளாண் விஞ்ஞானியை இயக்குநராகவும் நியமிக்க வேண்டும். புதுவை அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்தால், அறிவியல் நிலையம் செழிப்புற்று, வேளாண் துறை வளா்ச்சியும் அதிகரிக்கும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.